வாஷிங்டன் – வட கொரியாவுக்கு எதிராகக் கட்டம் கட்டமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாடு பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசாங்கத்தைக் கொண்டது என நேற்று அறிவித்தார்.
பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் வட கொரியா சேர்க்கப்பட்டது, அந்நாட்டுக்கு எதிராக டிரம்ப் இதுவரை எடுத்து வந்துள்ள பல்வேறு நடவடிக்கைகளில் உச்ச கட்டமாகப் பார்க்கப்படுகிறது.
அதே வேளையில், வட கொரியாவுக்கு எதிரான புதிய தடைகளை அமெரிக்க நிதியமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் இருந்து வந்த வட கொரியாவை 2008-இல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் அந்தப் பட்டியலில் இருந்து நீக்கினார்.
தற்போது டிரம்ப் அந்தப் பட்டியலில் வட கொரியாவை மீண்டும் சேர்த்திருப்பதைத் தொடர்ந்து அந்நாட்டின் மீதான அனைத்துலக நெருக்குதல்கள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.