Home நாடு “போராட்டத்தில் தொய்வடைய மாட்டேன்” – மகாதீருக்கு நன்றி தெரிவித்த ரபிசி ரம்லி!

“போராட்டத்தில் தொய்வடைய மாட்டேன்” – மகாதீருக்கு நன்றி தெரிவித்த ரபிசி ரம்லி!

743
0
SHARE
Ad

Rafizi-Ramli-featureகோலாலம்பூர் – அண்மையில் ஷா ஆலாம் நீதிமன்றம் விதித்த 30 மாத சிறைத் தண்டனை குறித்து கலக்கமடைய வேண்டாம் என்றும் போராட்டத்தைத் தொய்வில்லாமல் தொடர வேண்டும் என்றும் துன் மகாதீர் தனக்கு வழங்கியுள்ள அறிவுரைகளுக்கு பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினரும் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவருமான ரபிசி ரம்லி (படம்) நன்றி தெரிவித்திருக்கிறார்.

அதே வேளையில் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனையால் தனது பிரச்சாரங்களும், தேசிய முன்னணிக்கு எதிரானப் போராட்டங்களும் தொய்வடையப் போவதில்லை, மேலும் வீரியத்துடன் தொடரும் என்றும் ரபிசி சூளுரைத்துள்ளார்.

கடந்த வார இறுதியில் மட்டும் பேராக் மாநிலத்தில் உள்ள பத்து நாடாளுமன்றத் தொகுதிகளுக்குச் சென்று அங்கு மலாய் வாக்காளர்களைச் சந்தித்து தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டதாகவும், அங்கெல்லாம் தனக்கு அமோக ஆதரவு வழங்கப்பட்டதாகவும் ரபிசி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

Mahathirதேசிய முன்னணியின் வலிமை வாய்ந்த தலைவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் கொண்ட பேராக் தொகுதிகளான பாகான் டத்தோ (துணைப் பிரதமர் சாஹிட் ஹாமிடி), தஞ்சோங் மாலிம் (மசீச தலைமைச் செயலாளர் ஓங் கா சுவான்) பாசிர் சாலாக் (துணையமைச்சர் தாஜூடின் அப்துல் ரஹ்மான்), தம்புன் (முன்னாள் இரண்டாவது நிதியமைச்சர் ஹூஸ்னி ஹானாட்ஸ்லா), பாடாங் ரெங்காஸ் (சுற்றுலா அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ்) ஆகிய தொகுதிகளிலும் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டதாக ரபிசி கூறினார்.

தற்போது தேசிய இருதய மருத்துவ மையத்தில் நெஞ்சு தொற்று நோய் காரணமாக சிகிச்சை பெற்று வரும் பக்காத்தான் ஹரப்பான் தலைவர் துன் மகாதீர்  நேற்று திங்கட்கிழமை தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் வெளியிட்ட காணொளியில் ரபிசி தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை குறித்து கலக்கமடைய வேண்டாம் என்றும் மன உறுதியோடு போராட்டத்தைத் தொடர வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியிருந்தார்.

உடல் நலிவடைந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து கொண்டே மகாதீர் தனக்கு வழங்கியிருக்கும் அறிவுரையைப் பெரிதும் மதிப்பதாகவும், நன்றி தெரிவிப்பதாகவும் ரபிசி ரம்லி மேலும் தெரிவித்திருக்கிறார்.