Home நாடு எண்ணெய் வள முழு உரிமைகளையும் இனி சரவாக்கே கையாளும்

எண்ணெய் வள முழு உரிமைகளையும் இனி சரவாக்கே கையாளும்

770
0
SHARE
Ad
அபாங் ஜொஹாரி ஓப்பெங் – சரவாக் மாநில முதல்வர்

கூச்சிங் – சரவாக் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து எண்ணெய் வளம் தொடர்பான நடவடிக்கைகளும் இனி அந்த மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என மாநில முதல்வர் அபாங் ஜொஹாரி அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் தொடங்கி இந்த நடைமுறை முழுமையாகப் பின்பற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

சரவாக்கில் இதுவரையில் எண்ணெய் எடுக்கும் பணிக்கும், மற்றும் பெட்ரோலியம், எரிவாயு போன்ற தொழில்கள், சுத்திகரிப்பு ஆலைகள் என அனைத்தும் மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன்தான் மேற்கொள்ளப்படும் என்ற நடைமுறை இருந்து வந்தது.

#TamilSchoolmychoice

சரவாக்கின் இயற்கை வளங்கள் மீதான உரிமைகள் அந்த மாநிலத்தின் கைப்பிடியில்தான் இருந்து வரவேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக இருந்து வந்தன.

இந்நிலையில் பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரதமர் நஜிப் தலைமையிலான மத்திய அரசாங்கம் தனது ஆதிக்கத்தை சரவாக்கில் விட்டுக் கொடுத்திருப்பது அம்மாநில மக்களின் வாக்குகளை ஈர்க்கும் அல்லது தக்க வைத்துக் கொள்ளும் வியூகமாகப் பார்க்கப்படுகிறது.

எனினும் மத்திய அரசாங்கத்தின் எண்ணெய் வள நிறுவனமான பெட்ரோனாஸ் தொடர்ந்து தனது திட்டங்களை எந்தவித இடையூறுகளும் இன்றி தொடர்ந்து வரும் என்றும், ஆனால் எல்லாத் திட்டங்களும் இனி மாநில அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியுடன்தான் இயங்க முடியும் என்றும் அபாங் ஜொஹாரி தெரிவித்திருக்கிறார்.

31 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட சரவாக் மாநிலத்தின் ஆதரவு என்பது தேசிய முன்னணி அரசாங்கம் மீண்டும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெல்ல தேவைப்படும் முக்கியக் களமாகப் பார்க்கப்படுகிறது.