Home நாடு 45% இந்தியர்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவு – 25% பக்காத்தானுக்கு ஆதரவு

45% இந்தியர்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவு – 25% பக்காத்தானுக்கு ஆதரவு

1110
0
SHARE
Ad
ரபிசி ரம்லி

கோலாலம்பூர் – பண்டான் நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் கட்சியின் உதவித் தலைவருமான ரபிசி ரம்லி நிறுவனராக இருக்கும் இன்வோக் எனப்படும் ஆய்வு மையத்தின் முடிவுகளின்படி எதிர்வரும் பொதுத் தேர்தலில் 45.4 விழுக்காடு இந்தியர்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவாக வாக்களிப்பர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சுமார் 24.9 விழுக்காடு இந்தியர்கள் மட்டுமே பக்காத்தானுக்கு ஆதரவு அளிப்பர் என்றும் அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆச்சரியப்படத்தக்க அளவில் 0.2 விழுக்காடு இந்தியர்கள் பாஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம், பெரும்பான்மை இந்திய வாக்குகள் தேசிய முன்னணிக்கே கிடைக்கும் என ரபிசி ஒப்புக் கொண்டுள்ளார். பாரம்பரியமாக இந்தியர்கள் தேசிய முன்னணியை ஆதரித்து வந்தாலும், 2008 பொதுத் தேர்தலில் பெரும்பான்மை இந்தியர்கள் தேசிய முன்னணிக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால், 2013-ஆம் ஆண்டுக்குள் இந்தியர்களின் ஆதரவு தேசிய முன்னணிக்கு கணிசமான அளவுக்கு உயர்ந்தது.

#TamilSchoolmychoice

இதே ஆய்வில் 44.2 விழுக்காடு சீனர்கள் பக்காத்தானுக்கு ஆதரவாக வாக்களிப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 18.9 விழுக்காடு சீனர்கள் மட்டுமே தேசிய முன்னணிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்.

ஆனால், சீனர்கள் யாரும் பாஸ் கட்சிக்கு ஆதரவு தரமாட்டோம் எனத் தெரிவித்திருக்கின்றனர்.

இன்வோக் மேற்கொண்ட ஆய்வில் காணப்படும் மற்றொரு முக்கிய அம்சம் மொத்த வாக்காளர்களில் 30 முதல் 35 விழுக்காடு வரையிலான வாக்காளர்கள் இன்னும் யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்யவில்லை என்பதாகும். எனவே, பொதுத் தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில் வாக்காளர்களிடையே பெருமளவில் மனமாற்றங்கள் ஏற்படும் என்றும், அப்போதுதான் எந்தக் கூட்டணிக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரிய வரும் எனக் கருதப்படுகிறது.

சிலாங்கூரை மீண்டும் பக்காத்தான் கைப்பற்றும்

தொகுதி எல்லை மாற்றங்கள் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு அமுல்படுத்தப்பட்டாலும் அதனால் பக்காத்தானுக்கு சிலாங்கூர் மாநிலத்தில் பாதிப்பில்லை என்றும் ரபிசி ரம்லி கூறுகிறார். காரணம், நஜிப் தலைமைத்துவத்திற்கு எதிரான வெறுப்பு சிலாங்கூரில்தான் அதிகமாகக் காணப்படுகிறது என்றும் எப்படித்தான் தொகுதி எல்லை மாற்றங்களைச் செய்தாலும் பெரும்பான்மை மலாய் வாக்காளர்கள் நஜிப் தலைமைத்துவத்திற்கு எதிரான போக்கைக் கொண்டிருக்கின்றனர் என்றும் ரபிசி குறிப்பிட்டார்.

இதே இன்வோக் ஆய்வுகளின்படி தேசிய முன்னணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் 5 மாநிலங்களை இழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வுகளின் முடிவுகளை ஏற்பதாக இல்லையா என்பதை மலேசியர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம் என்றும் ரபிசி தெரிவித்துள்ளார்.