Home நாடு மலேசிய வரலாற்றில் ‘புதன்கிழமை’ பொதுத்தேர்தல் முதல் முறையல்ல!

மலேசிய வரலாற்றில் ‘புதன்கிழமை’ பொதுத்தேர்தல் முதல் முறையல்ல!

821
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தல், வரும் மே 9-ம் தேதி, புதன்கிழமை நடைபெறவிருக்கிறது.

தேர்தல் ஆணையம் இதனை நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும், எதிர்கட்சிகள் தொடங்கி சாதாரண பொதுமக்கள் வரை அதனைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.

வேலை நாளில் பொதுத்தேர்தல் வைத்தால், வாக்குகள் பதிவாவது மிகவும் குறைந்தது அதன் மூலம் மீண்டும் வெற்றி பெற்றுவிட தெசிய முன்னணி திட்டமிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்.

#TamilSchoolmychoice

இதனிடையே, இன்று காபந்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், மே 9-ம் தேதி, பொதுத்தேர்தலை முன்னிட்டு மலேசியாவிற்குப் பொதுவிடுமுறை அளிப்பதாக அறிவித்தார்.

இது இப்படி இருக்க, வார நாளில் பொதுத்தேர்தல் நடப்பது மலேசியாவிற்கு இது முதல் முறையல்ல. வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்த்தால் இதுவரை நான்கு முறை மலேசியப் பொதுத்தேர்தல் வார நாளில் நடைபெற்றிருக்கிறது.

அதிலும் குறிப்பாக, 1959-ம் ஆண்டு பொதுத்தேர்தல் ‘புதன்கிழமை’ நடைபெற்றிருக்கிறது. 1982-ம் ஆண்டு வியாழக்கிழமையும், 1995-ம் ஆண்டு செவ்வாய்க்கிழமையும், 1999-ம் ஆண்டு திங்கட்கிழமையும் பொதுத்தேர்தல் நடந்திருக்கிறது.

அதேபோல், கடந்த 13-வது பொதுத்தேர்தல் உட்பட மொத்தம் 9 பொதுத்தேர்தல்கள் வார இறுதியில் நடைபெற்றிருக்கிறது.

1964, 1969, 1974, 1978, 1986, 1990, 2004, 2008, 2013 ஆகிய 9 பொதுத்தேர்தல்கள் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்திருக்கிறது.

இதனிடையே, வரும் மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்திற்கு மொத்தம் 11 நாட்கள் ஒதுக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம்.

ஆனால், மலேசிய வரலாற்றில் இதுவரை, மிகக் குறைவான தேர்தல் பிரச்சாரத்தோடு நடந்த பொதுத்தேர்தல் எது தெரியுமா? 2004-ம் ஆண்டு பொதுத்தேர்தல் தான். மொத்தமே 8 நாட்கள் தான் தேர்தல் பிரச்சாரத்திற்கு காலம் அவகாசம் கொடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

அது சரி, 35 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு கொடுக்கப்பட்டு, ஆக அதிகமான தேர்தல் பிரச்சார கால அவகாசத்தோடு நடத்தப்பட்ட பொதுத்தேர்தல்கள் எவை தெரியுமா? 1959, 1964 மற்றும் 1969 என மொத்தம் மூன்று பொதுத்தேர்தல்களும் 35 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்தோடு நடந்தவையாகும்.

தொகுப்பு: செல்லியல்