கோலாலம்பூர் – தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டு, தாங்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுவமாக முன்னாள் பிரதமர் நஜிப் மனைவி ரோஸ்மா மன்சோர் கண்டனம் தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து, இனி சோதனைகளை மேற்கொள்ளும்போது காவல் துறை அதிகாரிகள் தங்களின் செல்பேசிகளைக் கொண்டு செல்ல முடியாது என அமார் சிங் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
சோதனைகள் மேற்கொள்ளப்படும்போது,வீட்டில் உள்ளவர்களுக்குத் தொந்தரவு எதுவும் கொடுக்காமல், நிபுணத்துவத்தோடும், பொறுப்போடும் காவல் துறையினர் நடந்து கொள்ள வேண்டும் என்றும் வணிகக் குற்ற இலாகாவின் இயக்குநரான அமார் சிங் கட்டளையிட்டுள்ளார்.
அதே வேளையில் இதுவரையில் வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படங்களை ஆராய்ந்து அவை சோதனைகள் மேற்கொண்ட காவல் அதிகாரிகளால் வெளியிடப்பட்டவையா அல்லது மற்றவர்களால் வெளியிடப்பட்டவையா என்பதும் கண்டறியப்படும்.
காரணம், நஜிப் இல்லங்களில் சோதனைகள் நடத்தப்பட்டபோது, அங்கு அவரது உறவினர்களும் நண்பர்களும் உடனிருந்தார்கள் என்றும் அமார் சிங் தெரிவித்திருக்கிறார்.
தங்களின் இல்லங்களில் சோதனை நடத்திய காவல் துறையினர் அங்கு குளிர்சாதனப் பெட்டியில் இருந்த சாக்லெட்டுகளை திருடி எடுத்துத் தின்றுவிட்டனர் என்றும் நஜிப் புகார் கூறியிருந்தார்.