வாஷிங்டன் – அகில உலகமும் மிகவும் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் இடையிலான சந்திப்பு இரத்து செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்திருந்தாலும், அந்த சந்திப்பு திட்டமிட்டபடி அதே ஜூன் 12-ஆம் தேதி சிங்கப்பூரிலேயே நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரியா தீபகற்பம் முழுவதும் அணு ஆயுதமற்ற வட்டாரமாக இயங்குவதற்கு தனது முழு கடப்பாடு என்றும் உள்ளது என கிம் ஜோங் உறுதியளித்ததோடு, டிரம்புடனான சந்திப்பு குறித்த தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு இரத்து செய்யப்படாமல் நடைபெறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
கிம் ஜோங் நடவடிக்கைகள் சிலவற்றால் இந்த சந்திப்பை இரத்து செய்யும் நெருக்கடிக்குத் தான் ஆளானதாகக் குறிப்பிட்டிருக்கும் டிரம்ப், ‘நீங்கள் மனம் மாறினால் கண்டிப்பாக என்னை அழையுங்கள். அல்லது கடிதம் எழுதுங்கள். நாம் சந்திப்போம்’ என்றும் தெரிவித்திருந்தார்.