புத்ரா ஜெயா – 1எம்டிபி தொடர்பான தடை செய்யப்பட்ட ஆவணங்களை வைத்திருந்ததாக அதிகாரத்துவ சட்டத்தின் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை எதுவும் இன்றி விடுலை செய்யப்பட்டார்.
அதிகாரத்துவ ரகசியக் குற்றச்சாட்டுகளின் கீழ் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் ரபிசி ரம்லி நடத்தி வந்த மூன்றாண்டு கால சட்டப் போராட்டம் இதனைத் தொடர்ந்து இன்றோடு ஒரு மகிழ்ச்சியான முடிவை எட்டியது.
1 எம்டிபி தொடர்பான தடை செய்யப்பட்ட ஆவணங்களை 24 மார்ச் 2016-ஆம் நாள் நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது வைத்திருந்ததாக அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட ரபிசிக்கு கடந்த 14 நவம்பர் 2016-ஆம் நாள் 18 மாத சிறைத் தண்டனையை செஷன்ஸ் நீதிமன்றம் விதித்தது.
அந்தத் தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ரபிசி. எனினும் அந்த 18 மாத சிறைத் தண்டனையை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் மறுஉறுதிப்படுத்தியது.
அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலையும் ஏற்பட நடந்து முடிந்த மே 9 பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டு பக்காத்தான் கூட்டணிக்காக தீவிரப் பிரச்சாரத்தில் மட்டுமே அவர் ஈடுபட்டார்.
தனக்கு எதிரான தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த ரபிசியின் மேல்முறையீட்டை இன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் (கோர்ட் ஆப் அப்பீல்) விசாரித்தது.
அகமட் அஸ்னாவி தலைமையிலான மூவர் அடங்கிய அமர்வு இன்றைய மேல்முறையீட்டை விசாரித்தது. அப்துல் கரிம் அப்துல் மற்றும் கமார்டின் ஹாஷிம் ஆகிய இருவரும் இன்றைய அமர்வில் பங்கேற்ற மற்ற இரு நீதிபதிகளாவர்.
ரபிசிக்கு நன்னடத்தை பிணை (ஜாமீன்) மட்டுமே வழங்க வேண்டும் அவரின் வழக்கறிஞர்கள் சமர்ப்பித்த வாதத்திற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக ரபிசி மேல்முறையீடு செய்யவில்லை மாறாக, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மட்டுமே அவர் மேல் முறையீடு செய்துள்ளார் என்பதை ரபிசியின் வழக்கறிஞர் அகமட் நிசாம் ஹாமிட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து மேல்முறையீட்டை பரிசீலித்த நீதிமன்றம், அடுத்த இரண்டாண்டுகளுக்கு நன்னடத்தை பிணை ரபிசிக்கு வழங்கப்படுகிறது என்றும் ஒரு நபர் பிணையாக 10 ஆயிரம் ரிங்கிட் செலுத்த வேண்டும் எனவும் நிர்ணயித்தது.
ரபிசிக்கு ஆதரவாக ஜோகூர்பாரு நாடாளுமன்ற உறுப்பினர் அக்மல் நஸ்ருல்லா நசீர் பிணை உறுதியை வழங்கியுள்ளார்.
இந்த வழக்கிலிருந்து ரபிசி விடுதலையாகி விட்டாலும் வங்கிகள் மற்றும் நிதித் துறை அமைப்புகள் சட்டம் 1989-இன் கீழ் மற்றொரு வழக்கில் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார் ரபிசி ரம்லி.