Home நாடு டோமி தோமஸ்: மாமன்னர் ஒப்புதல்!

டோமி தோமஸ்: மாமன்னர் ஒப்புதல்!

1584
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிரதமர் துன் மகாதீரின் பரிந்துரைக்கேற்ப அடுத்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக டோமி தோமஸ் நியமிக்கப்பட மாமன்னர் சுல்தான் முகமட் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனை அரண்மனையின் கட்டுப்பாட்டு நிர்வாகி  டத்தோ வான் அகமட் டஹ்லான் அப்துல் அசிஸ் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

அரசியல் சாசனம் விதி 145 (1) இன்படி மாமன்னர் இந்த ஒப்புதலை அளித்தார் என்றும் வான் அகமட் தெரிவித்திருக்கிறார். இந்த விதிப்படி அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் நியமனத்திற்கு பிரதமரின் பரிந்துரைக்கேற்ப மாமன்னர் ஒப்புதல் அளிப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் நியமனத்தில் ஏற்பட்டிருந்த முட்டுக்கட்டைகள் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

இதற்கிடையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று திங்கட்கிழமை (ஜூன் 4) இரவு மாமன்னரைச் சந்தித்து பக்காத்தான் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும், பூமிபுத்ரா மற்றும் இஸ்லாமியர்களின் உரிமைகளையும் பக்காத்தான் அரசாங்கம் தற்காக்கும் என்ற உறுதிமொழியையும் வழங்கினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் நியமனம் குறித்து விவாதிக்க இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 5) மலாய் ஆட்சியாளர்களின் மாநாடு நடைபெறவிருக்கும் நிலையில் அதற்கு முன்பாகவே மாமன்னர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடப்பு தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலியின் நியமனம் இரத்து செய்யப்படவும் மாமன்னர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.