மாஸ்கோ – நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 19) நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் உபசரணை நாடான இரஷியா தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்ததன் மூலம், உள்நாட்டு இரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
எகிப்துடனான நேற்றைய ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் இரஷியா வெற்றி பெற்றது.
ஏற்கனவே, இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் முதல் ஆட்டத்தில் 5-0 கோல் எண்ணிக்கையில் சவுதி அரேபியாவைத் தோற்கடித்தது இரஷியா.
எகிப்தின் குழுத் தலைவர் (கேப்டன்) அகமட் பாத்தி முதல் பாதி ஆட்டத்தில் 47-வது நிமிடத்தில், தவறுதலாக பந்தைத் தனது தரப்பு கோல் வலைக்குள் புகுத்தி – சொந்த கோல் அடித்து – இரஷியாவுக்கு முதல் வெற்றியை பெற்றுத் தந்தார். உலகக் கிண்ண ஆட்டங்கள் தொடங்கியதிலிருந்து இந்த கோலுடன் சேர்த்து இதுவரை 5 சொந்தக் கோல்கள் அடிக்கப்பட்டிருக்கும் சுவாரசியம் நிகழ்ந்திருக்கிறது.
அடுத்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரஷியா மேலும் 2 கோல்களைப் புகுத்தியது. செரிஷேவ் 59-வது நிமிடத்திலும், டிசுபா 62-வது நிமிடத்திலும் கோல்களைப் புகுத்தி இரஷியாவை 3-1 என்ற கோல் நிலையில் முன்னணிக்குக் கொண்டு வந்தனர்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘ஏ’ பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கும் இரஷியா அடுத்து உருகுவேயுடன் மோதுகிறது. இதுவே, ‘ஏ’ பிரிவில் அதன் இறுதி ஆட்டமாகும்.