புத்ரா ஜெயா – கல்வி அமைச்சரின் சிறப்பு ஆலோசகராக நியமனம் பெற்றிருந்த வான் சைபுல் வான் ஜான் பிடிபிடிஎன் எனப்படும் தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் ஜூன் 18 முதல் அமுலுக்கு வருகிறது. தனது பணிகளைத் தொடக்கியிருக்கும் வான் சைபுல் முதல் அறிவிப்பாக 429,945 பிடிபிடிஎன் கடன் பெற்ற முன்னாள் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லத் தடைவிதிக்கும் கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிவித்தார்.
லெங்கோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாம்சுல் அனுவார் நசாராவுக்குப் பதிலாக வான் சைபுல் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கல்வித் துறையில் பிரபலமானவராக விளங்கிய வான் சைபுல் 14-வது பொதுத் தேர்தலில் கெடா மாநிலத்தில் உள்ள பெண்டாங் நாடாளுமன்றத் தொகுதியில் பிரிபூமி பெர்சாத்து கட்சியின் சார்பாக பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டார். எனினும் நான்குமுனைப் போட்டியில் அந்தத் தொகுதியில் அவர் பாஸ் வேட்பாளரிடம் தோல்வி கண்டார்.
பெர்சாத்து கட்சியில் வியூக மற்றும் கொள்கை வகுப்பு குழுவின் துணைத் தலைவராகவும் அவர் செயலாற்றுகிறார்.