கோலாலம்பூர் – நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நஜிப் துன் ரசாக் மீதான வழக்கு நிதிக்கு அம்னோ மகளிர் பிரிவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 261,286 மலேசிய ரிங்கிட் தொகையைத் திரட்டி வழங்கினர். மேலும் அம்னோ மகளிர் ஒருவர் தனது இரண்டு தங்க நகைகளையும் நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.
இதனை அம்னோ மகளிர் தலைவி டத்தோ டாக்டர் நொராய்னி அகமட் தெரிவித்திருக்கிறார்.
இன்று திங்கட்கிழமை ஜூலை 9-ஆம் தேதியுடன் நஜிப் துன் ரசாக் தனது வழக்குக்கான உத்தரவாதத் தொகையான 1 மில்லியன் ரிங்கிட்டில் எஞ்சிய 5 இலட்சம் ரிங்கிட்டைச் செலுத்தியாக வேண்டும்.
நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட அன்று நஜிப் சார்பில் அவரது புதல்வரும், புதல்வியும் 5 இலட்சம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையைச் செலுத்தினர்.
எஞ்சிய தொகையைச் செலுத்த இன்று ஜூலை 9 வரை நீதிமன்றம் அவகாசம் வழங்கியிருக்கிறது.
தனது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதால் உத்தரவாதத் தொகைக்கு பதிலாக தனது இல்லங்கள் மீதான நிலப்பட்டாக்களை அடமானம் வைக்கத் தயாராக இருப்பதாக நஜிப் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் அவருக்கு ஆதரவு தரும் வகையில் அவரது ஆதரவாளர்களும், அம்னோவினரும் சட்ட உதவி நிதி ஒன்றைத் தொடக்கியுள்ளனர்.