Home Uncategorized நுழைவாயில்….

நுழைவாயில்….

1002
0
SHARE
Ad

மலேசியாவின் முதல் அலைத் தொடர்பு பத்திரிக்கை “செல்லியல்’…

இன்று முதல் மலேசியாவின் முதல் அலைத் தொடர்பு பத்திரிக்கை செல்லியல் என்ற பெயரில் அலை விரிக்கின்றது.!
அகில உலகத்திலும் முதன் முதலாக முகிழ்க்கும் முழுமையானதோர் அலைத் தொடர்பு பத்திரிக்கையும் இதுவாகத்தான் இருக்கும் என்பது எங்களின் அனுமானம்!
முரசு மென்பொருள் உருவாக்கத்திலும், தாய்த் தமிழை கணிணித் தமிழாக உருமாற்றுவதிலும் அன்று முதல் இன்றுவரை அயராது தொடர்ந்து சிந்தித்தும் உழைத்தும் வரும் முத்தெழிலனின் கைவண்ணத்தில் உருவாகியுள்ளது இந்த செல்லியல்.
மெல்லினம், வல்லினம், இடையினம் என மூன்றாகப் பிரிக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள் கணிணித் தமிழாக உருவெடுத்தபோது செல்லினம் என நான்காவதாக ஓரினம் உதிக்க காரணமாக இருந்தவர் முத்தெழிலன்.
அவருடன் அறிமுகம் இருந்தாலும், அவருடைய முரசு அறிமுக விழாக்களின் போது சந்தித்திருந்தாலும், நானும் அவரும் நெருங்கிப் பழகியதில்லை. முரசு மென்பொருள் சம்பந்தமாக ஒரு வர்த்தக முயற்சியில் நாங்கள் முனைந்தபோது அவரை அடிக்கடி சந்தித்து அளவளாவும் வாய்ப்பு கிடைத்தது.
கணிணித் தமிழ், மென்பொருள், இணையப் பத்திரிக்கை, நவீன தொழில் நுட்பங்கள், அலைத் தொடர்பு என்றெல்லாம் பல்வேறு தளங்களிலும், களங்களிலும் பயணித்த எங்களின் கருத்துப் பரிமாற்றங்களும், எண்ணங்களும் ஒரே நேர்க்கோட்டில் வந்து நின்றபோதுதான் “செல்லியல்” கருக் கொண்டது.
“செல்லியல்” என்ற புதுமை கமழும் பெயர்கூட பலத்த விவாதங்களுக்குப் பின்னர்தான், மேலும் பல மாற்று பெயர்களையும் பரிசீலித்த பின்னர்தான் உருவானது.
இயல், இசை, நாடகம் என முத்தமிழாக காலத்தைக் கடந்து நிற்கும் செம்மொழியை அலைத் தொடர்பு மொழியாக கொண்டு, மலேசியாவைக் களமாக வைத்து ஒரு பத்திரிக்கையை உருவாக்க வேண்டும் என நாங்கள் முடிவெடுத்தபோது, இலக்கியமும், எழுத்தும் இணைந்த இயற்றமிழை இணைத்துக் கொண்டு செல்லியல் என்ற புதியதொரு தமிழ் எழுத்துப் பிரயோகத்தை நாங்கள் முன் எடுத்து வைத்திருக்கின்றோம்.
எங்களின் முன்மொழிதலை தமிழ் மக்களும் வழிமொழிந்து ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகின்றோம்.

தொடர்ந்து, திரு முத்தெழிலன் செல்லியலின் உருவாக்கத்தில் ஈடுபட, நானும் அதன் உள்ளடக்கத்தில் சிந்தனையைச் செலுத்த இதோ, இப்போது உங்களின் செல்பேசிகளில் செல்லியல் முகம் காட்டி முறுவலிக்கின்றது.
தொழில் நுட்பத்தைப் பொறுத்தவரை தற்போதைய உச்சகட்டத்தின் மீது தமிழ் மொழியை முத்தெழிலன் உட்கார வைத்துவிட்டார். அந்த அலைத் தொடர்பு வடிவத்திற்குள் மக்களை ஈர்க்கக் கூடிய செய்திகளையும் தகவல்களையும் உடனுக்குடன் தந்து, செல்லியல் பத்திரிக்கையை மக்கள் செல்லுமிடமெல்லாம் படித்து மகிழும் பத்திரிக்கையாக, அவர்களின் மனங்கவர்ந்த பத்திரிக்கையாக மாற்றுவதற்கான எல்லா முயற்சிகளிலும் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவோம்.
அதுமட்டுமல்லாமல், செல்லியலில் செய்திகள் தொடர்பான ஒளி நாடா படக்காட்சிகள் (வீடியோ), ஒலி நாடா ஒலிபரப்புக்கள் (பொட்காஸ்ட்) ஆகியவற்றையும் இடம் பெறச் செய்து, அலைத் தொடர்பு நவீன தொழில் நுட்பத்தின் அடுத்த கட்டத்திற்கு தமிழ்ப் பத்திரிக்கை உலகை அழைத்துச் செல்லவும் நாங்கள் முடிவெடுத்துள்ளோம்.
அதிக செலவினத்தைக் கொண்ட எங்களின் இந்த வர்த்தக முயற்சி அதிக மக்களை சென்றடைய வேண்டும், அதிகமானோர் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் செல்லியலை இலவசமாகவே உங்களுக்கு வழங்குகின்றோம்.
மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கை வாசகர்களின் ஆதரவோடும், உலகெங்கிலும் உள்ள தமிழார்வ மக்களின் அரவணைப்போடும் செல்லியல் பீடு நடை போடும் என்பதே எங்களின் நம்பிக்கை,
இனி, இதோ உங்கள் கைவிரல்களின் நடுவில் எங்களின் செல்லியல்!
படித்து மகிழுங்கள்…
வணக்கத்துடன்,
அன்பன்

#TamilSchoolmychoice

இரா.முத்தரசன்
நிர்வாக ஆசிரியர்
செல்லியல்