Home நாடு கல்வி துணையமைச்சர் தமிழ் அறவாரிய உறுப்பினர்களைச் சந்தித்தார்

கல்வி துணையமைச்சர் தமிழ் அறவாரிய உறுப்பினர்களைச் சந்தித்தார்

1641
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – தமிழ்ப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகள் மீதும் கல்வி அமைச்சு தனிக் கவனம் செலுத்தும் என கல்வி துணை அமைச்சர் தியோ நீ சிங் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மலேசியத் தமிழ் அறவாரியத்தின் செயலவை உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளைச் சந்தித்த பின்னர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் துணையமைச்சர் தியோ நீ சிங் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ்க் கல்வியை இந்நாட்டில் மேம்படுத்துவதில் தமிழ் அறவாரியம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும், பங்களிப்பையும் நன்றாகப் புரிந்து கொள்வதற்கு இந்த சந்திப்பு உதவியதாகவும் அந்த அறிக்கையில் தியோ தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சந்திப்பின்போது விவாதிக்கப்பட்ட விவகாரங்களில் பள்ளிகளின் கட்டுமானம், ஆசிரியர்களின் தேவைகள், பாலர் பள்ளிகளில் உதவியாளர்கள் தேவை, நிதித் தேவைகள் ஆகிய அம்சங்கள் அடங்கும் என்றும் கல்வி துணை அமைச்சரின் அறிக்கை மேலும் தெரிவித்தது.

சில தமிழ்ப் பள்ளிகளில் நிலவும் மாணவர் பற்றாக்குறை, பள்ளிகளில் பள்ளி நிர்வாக வாரியத்தின் பங்கு, தமிழ்ப் பள்ளிகளின் நலன்கள் ஆகிய விவகாரங்களும் இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

நாட்டின் மேம்பாட்டில் முக்கிய அங்கமாகத் திகழும் வகையில் தரமான கல்வி, அனைத்துத் தரப்பினருக்கும் கிடைப்பதற்காகப் பாடுபட்டு வரும் அனைத்து இயக்கங்கள் மற்றும் அரசு சார்பற்ற இயக்கங்கள் ஆகியவற்றின் பங்களிப்பு குறித்து கல்வி அமைச்சு எப்போதுமே வரவேற்பதாகவும், மதிப்பளிப்பதாகவும் தியோ தனது அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.