Home நாடு ஆதி.இராஜகுமாரன்: “துவண்ட போதெல்லாம் தோள் கொடுத்தவர் – பன்முக ஆற்றலாளர்”

ஆதி.இராஜகுமாரன்: “துவண்ட போதெல்லாம் தோள் கொடுத்தவர் – பன்முக ஆற்றலாளர்”

1063
0
SHARE
Ad

Rajakumaran Photo Feature(கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி மறைந்த நயனம் வார இதழின் ஆசிரியரும் மக்கள் ஓசை நாளிதழின் பங்குதாரருமாகிய ஆதி.இராஜகுமாரன் அவர்களின் மறைவை முன்னிட்டு அவருடன் நெருக்கமாகப் பழகியவர்களில் ஒருவரான மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.இராஜேந்திரன் எழுதிய இந்தக் கட்டுரை கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 செப்டம்பர் 2018 மக்கள் ஓசை நாளிதழில் வெளியிடப்பட்டது. அந்தக் கட்டுரையை ஆதி.இராஜகுமாரனின் நினைவலையாக மீண்டும் செல்லியலில் பதிவேற்றம் செய்கிறோம்.)

இறப்பு என்பது இயற்கை என்றாலும் சிலரது மறைவு மட்டும் உயிரையே உறிஞ்சக்கூடிய வேதனையை அளித்துவிடுகிறது.

முத்தமிழ் மூதறிஞர் மறைவு கொடுத்த அதிர்வு அகற்றப்படாமல் இருந்த சூழலில் இன்னும் இரண்டு பேரிழப்புகள்.

பெ.இராஜேந்திரன்
#TamilSchoolmychoice

ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த 20 மாணவர்களோடு தமிழ் நாட்டுக்குக் கல்விச் சுற்றுலா மேற்கொண்டு அதன் இறுதி நாளில் மெரினா கடற்கரையில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விமானம் ஏறினோம்.

விடியற்காலையில் கோலாலம்பூர் விமான நிலையம் வந்தடைந்தபோது சுந்தரம்பாள் இளஞ்செல்வன் புலனத்தில் அனுப்பியிருந்த ‘எம். துரைராஜ் மறைவு என்ற செய்தி பேரிடியாய் வந்திறங்கியது.

சங்கச் செயலவையோடு அவரது இல்லத்திற்குச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து தயாராகிக் கொண்டிருந்த வேளையில், ஈப்போவிலிருந்து வழக்கறிஞர் மதியழகன் அழைத்தார்.

“செய்தி தெரியுமா? இராஜகுமாரன் நம்மை விட்டுப் போய்விட்டார்” என்றார்.

“எப்போது?”

“இப்போதுதான் ஐந்து நிமிடங்களுக்கு முன்பு தான். நயனம் கோபியுடன் தொடர்பு கொண்டேன். உறுதிப்படுத்தினார்”
தாங்க முடியவில்லை. அப்படியே கட்டிலில் சாய்ந்தேன்.

என் வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்புகளில் இராஜகுமாரனின் மறைவு ஏற்க முடியாத ஒன்று.

என்னுடைய வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் ஏதாவது ஒரு வகையில் அவர் சம்பந்தப்பட்டிருப்பார்.
இன்பமோ துன்பமோ என்னோடு அவர் இருந்திருக்கிறார். துன்பங்கள் சுழன்றடித்த போதெல்லாம் சாய்ந்து கொள்வதற்கு ஒரு தோழனின் தோளாய் விளங்கியிருக்கிறார். அந்தத் தோளே சாய்ந்துவிட்டதே!

மற்றவர் மதிக்கத்தக்க நிலையில் ஒரு மனிதன் உயர்ந்திருக்கிறான் என்றால் அந்த வளர்ச்சிக்கு யாராவது எந்த திசையில் இருந்தாவது ஏணியாய் உதவி இருப்பர். எனக்கு இராஜகுமாரனும்…!

ஆதி.இராஜகுமாரனுடன் கட்டுரையாளர் பெ.இராஜேந்திரன்

எண்ணற்ற சிரமங்களைக் கடந்து தட்டுத் தடுமாறி வாழ்க்கையில் முன்னேறியவர்களைத் தான் ஆசிரியர் உலகம் கூட ‘இவர் என் மாணவர்’ என உரிமை கொண்டாடுகிறது.

செல்வத்திலும் பதவியிலும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களை ‘இவர் என் ஆசான்; எனக்கு உதவியவர் என்று கூறுவதில்தான் தனக்கும் பெருமை எனப் பலர் நினைக்கின்றனர்.

வாழ்க்கையில் தோற்றவர்களை யாரும் சொந்தம் கொண்டாடுவதில்லை.

நல்ல செயல்களைச் செய்வதற்கும் உதவி புரிவதற்கும் நாம் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் செய்த சேவைகள் கூட அங்கீகரிக்கப்படும் என்று நானும்கூட பல முறை நினைத்தது உண்டு.

அரிதான மனிதர்!

ஆனால், ஆதி. இராஜகுமாரனின் வாழ்க்கை என்பது சராசரி மனிதர்களிலிருந்து மாறுபட்டது. அரிதான வாழ்க்கையை தனக்குரியதாக்கிக் கொண்டவர்.

‘இலக்கியகம்’ எனும் அமைப்பு ‘எனது ஆசிரியர்கள்’ எனும் தலைப்பில் ஒரு நூலை வெளியிட முற்பட்ட போது என்னுடைய ஆசிரியரைப் பற்றியும் எழுதச் சொன்னார்கள்.

என் பள்ளி ஆசிரியர்களை நினைவு கூராமல் பத்திரிகையில் எனக்கு ஆசிரியராக, வழிகாட்டியாக, விளங்கியவர்களைப் பற்றியும் அதில் முதன்மையானவராகத் திகழ்ந்த ஆதி. இராஜகுமாரனைப் பற்றியும் எழுதியிருந்தேன்.

ஏனென்றால், பத்திரிகைத் துறையில் அவரால்தான் என்னால் ஓரளவு தலைநிமிர முடிந்தது.

ஆதி. இராஜகுமாரனின் நட்பு வட்டம் மிகவும் குறுகியது என்று எல்லாருக்கும் தெரியும். அண்மைய காலத்தில்தான் அவரது நட்பு வட்டம் கொஞ்சம் விரிவடைந்தது. பாரதி மன்றத்தில் துணைத் தலைவராகப் பொறுப்பு ஏற்கும் அளவிற்குத் தன்னை மாற்றி வைத்திருந்தார்.

அன்றைய தொடக்கக் காலக்கட்டத்தில் அவரோடு கைகுலுக்குவது என்பது கூட கடினமான ஒன்றாக இருக்கும். அதற்குக் காரணமும் இருந்தது.

ஒருவரைப் பார்த்தவுடனேயே அவரது குணாதிசயங்களைக் கணிக்கும் ஆற்றலை அவர் பெற்றிருந்தாரோ என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது.

துயரத்தில் உடனிருப்பார்!

துக்கமான சம்பவமா? ஏதோ நாமும் வந்தோம், பேசினோம், விசாரித்தோம், புறப்பட்டோம் என்றிருக்க மாட்டார்.
என் மூத்த மகன் குமணன் பிறந்து ஒரு மாதத்திலேயே அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை. அந்தத் தகவலை மருத்துவர் என்னிடம் சொன்னபோது, என் அருகில் இருந்தவர் ஆதி. இராஜகுமாரன்.

மருத்துவர் சொன்ன செய்தி காதில் இறங்கி இதயத்தை அடைத்துக் கொண்டிருக்கையில் ஒரு மாதக் குழந்தையை சுமந்து கொண்டு மருத்துவர் அறையை விட்டு வெளியேறியது மட்டும்தான் நினைவில் இருக்கிறது.

கண் விழித்துப் பார்த்தபோது மருத்துவமனை படுக்கையில் கிடந்தேன். அந்தப் பேரிடி என்னை புரட்டிப் போட்டிருந்தது.

மருத்துவ சோதனை, அறுவைச் சிகிச்சை, தொடர் சோதனை என மூன்று ஆண்டுகள் மருத்துவமனை, வீடு, அலுவலகம் என மாறி மாறி சுழன்று கொண்டிருந்தது வாழ்க்கை.

மோட்டார் சைக்கிள் மட்டுமே என்னுடைய வாகனம். அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர், அசுந்தா மருத்துவமனைக்கு மகனை சோதனைக்காக வாரத்தில் ஒரு நாள் கொண்டு செல்ல வேண்டும். மோட்டார் சைக்கிளில் பயணிக்க முடியாது. வாடகைக் காருக்குப் பணம் செலுத்த என் சூழல் ஒத்துவராது என்பதை அறிந்து, ஒவ்வொரு முறையும் தன் காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வீட்டில் கொண்டு வந்து விடுவார்.

அப்போது நான் வசித்தது பூச்சோங் சாலை 8-ஆவது மைலில். அவர் குடியிருந்தது ஸ்ரீசிகாம்புட் பகுதியில். வாகன நெரிசலைக் கடந்து அசுந்தா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார். நிழல் போல் என்னைத் தொடர்வார்.

அந்த மனம் இறுதிவரை அவரிடம் இருந்தது.

ஆதி. இராஜகுமாரன் வாழ்க்கையைப் பதிவு செய்தால் பலருக்கு அது பாடமாக அமையும். ஆனால், அவர் தனது சுவடுகளைப் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டாதவராகவே இருந்தார்.

எந்தப் படத்தையும், கோப்பையும் அவரிடம் கொடுத்துவிட முடியாது. எங்காவது வைத்து மறந்து விடுவார்.

அவரைப் பற்றிய குறிப்புகளைப் பதிவு செய்து வைக்க முற்பட்ட போதெல்லாம், ‘நான் என்ன சொல்லப் போகிறேன்; விடுங்க’ என்பார்.

ஆனால், திடீரென்று ஒரு நாள் நயனத்தில் என்னைப் பற்றி எழுதத் தொடங்கினார். சுமார் 32 வாரம் அந்தத் தொடர் நீடித்தது. அது எனக்கு இன்னொரு சாசனம்.

விரும்பிச் சாப்பிடுவார்!

என் வீட்டிற்கு வருவதும் என்னை சமைக்கச் சொல்லிச் சாப்பிடுவதும் அவருக்குப் பிடித்தமான ஒன்று. சில வேளைகளில் பந்திங்கிலிருந்து உணவை சமைத்து எடுத்து வருவேன். வீட்டிற்கு வரும் போதெல்லாம் அவர் விரும்பிய உணவுகளைச் சமைத்துக் கொடுப்பதிலும் ஒன்றாக உண்பதிலும் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்படும்.

ஆட்டிறைச்சி எனக்குப் பிடிக்காத ஒன்று. அவருக்கு அது மட்டுமே பிடிக்கும். ஆனாலும், அவருக்காகவே ஆட்டிறைச்சியை சுவையாக சமைக்கக் கற்றுக் கொண்டேன். என் வீட்டிற்கு வரும் போதெல்லாம் வெளியாட்கள் யாரும் அங்கிருப்பதை விரும்பமாட்டார்.

ஆனால், எப்போதும் என்னைச் சுற்றி குறிப்பிட்ட சிலர் இருப்பார்கள்.

ஒரு சிலரைப் பார்த்தவுடன் அவர்களுடைய குணாதிசயங்களைப் பற்றி யூகிக்கும் ஆற்றலை இயற்கை அவருக்கு வழங்கியிருந்தது போலும்.

‘இவரது நட்பு உங்களுக்கு வேண்டாம். இவரால் உங்களுக்குப் பிரச்சினை ஏற்படும் என்றெல்லாம் அறிவுறுத்துவார்.

எல்லா அறிவுரைகளையும் கேட்டு நடக்கும் எனக்கு இதை மட்டும் கடைப்பிடிப்பது கடினமாக இருந்தது.

‘நட்பு என்றால், முகத்தில் காறி உமிழ்ந்தால் கூட துடைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் நட்பு’ என்பேன் நான்.

‘இந்த மாதிரியான நட்பால் துரோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போகும். எச்சரிக்கை’ என்பார்.

அதன் விளைவாய் காலம் எனக்குப் பாடம் படித்துக் கொடுத்தது.

அவரது வார்த்தைகளிலிருந்த உண்மையை ஆண்டுகள் பல கடந்து உணரும் நிலை எனக்கு ஏற்பட்டதுண்டு.

அவர் நட்பு வட்டத்தை சுருக்கிக் கொண்டதன் அர்த்தமும் புரிந்தது.

பல்துறை ஆற்றல் மிகுந்தவர்

ஆதி. இராஜகுமாரன் பல துறைகளில் ஆற்றல் மிகுந்தவர். மலேசியத் தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் கணினியை முதன் முதலில் பயன்படுத்தியவர் அவர்தான்.

தமிழகத்தில் பெரியார் பயன்படுத்திய எழுத்து முறையை நயனத்தின்வழி அவர்தான் முதலில் இங்கு பயன்படுத்தினார். அதன் பிறகுதான் இன்றைய எழுத்து முறை மலேசியாவிற்கு அறிமுகமானது.

இன்று உலகம் ‘இணையம்’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறது என்றால் அந்த வார்த்தையை வழங்கியவர் ஆதி. இராஜகுமாரன்தான்.

சிறுகதை, புதுக்கவிதைத் துறைகளில் அவர் மிகப் பெரிய ஜாம்பவனாக விளங்கினார். இராஜகுமாரன் என்கிற பெயரில் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கையை விட ‘புதுநிலவு’ என்ற பெயரில் அவர் எழுதிக் குவித்த கவிதைகள் அதிகம்.

செம்மைப்படுத்தும் ஆற்றல் மிகுந்தவர்

எனக்குத் தெரிந்து செய்திகளை செம்மைப் படுத்தும் ஆற்றலில் அவரை மிஞ்சக்கூடியவர்கள் இங்கு யாருமில்லை. பத்துப் பக்கச் செய்தியைக் கொடுத்தால் இரண்டு பக்கத்தில் செம்மைப்படுத்திக் கொடுப்பார்.

பத்துப் பக்கங்களில் சொன்ன தகவல்களை இரண்டே பக்கத்தில் சுருக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது.

படிக்கிற காலத்திலேயே புதுவையில் அவர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டவர் என்ற தகவல் பலருக்குத் தெரியாது.

இந்திய அரசியலில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக பொருளீட்ட வேண்டும் என்பதற்காகவே அவர் மலேசியாவுக்கு வந்தார். இங்கு பத்திரிகை உலகம் அவரை ஆக்கிரமித்துக் கொண்டதால் தன் வாழ்க்கையை இங்கேயே முடித்துக் கொண்டார்.

தமிழகத்தில் படிக்கிற காலத்திலேயே சுட்டி என்ற கையடக்க இதழை நண்பர்களோடு இணைந்து நடத்தியவர். அந்த நட்பு வட்டத்தைக் கடைசி வரை பேணி வந்தார்.

நட்பு காத்தேன்

எங்களுக்கிடையேயும் சில உரசல்களும் ஏற்பட்டது உண்டு. அவற்றால் நட்பும் உறவும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்திருக்கிறேன்.

ஏற்கனவே குறிப்பிட்டது போல தமிழ் ஓசையில் வேலைக்குச் சேர்வதற்கு முன்னரே, ஆயிரம் வெள்ளிக்கும் கூடுதலாக வருமானம் ஈட்டி வந்தேன். தமிழ் ஓசையில் 350 வெள்ளி மட்டுமே வருமானம் என்றாகி விட்டது.

இந்த நிலையில் பொருளாதாரச் சுமையை ஈடுசெய்ய பகுதி நேரமாக வேலை செய்து வருமானத்தை ஈட்ட வேண்டும். இரவு 10 மணியிலிருந்து விடியற்காலை 3 மணி வரை பெட்டாலிங் பகுதியில் பெட்ரோல் நிலையத்தில் கார் கழுவும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அந்தத் தகவலை அறிந்து அவரது சிந்தனையில் ஒரு மாற்றுத் திட்டம் உருவானது.

முதலில் குறிப்பிட்ட சில நண்பர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை ஆர்டர் எடுப்பதும் மொத்தமாகப் பொருட்களை வாங்கி ஆர்டர்களுக்கு ஏற்றபடி பிரித்து விநியோகிப்பது என்றும் முடிவானது.

இரண்டு மூன்று மாதங்கள் செய்து பார்த்தோம். உழைப்பை உறிஞ்சியதே தவிர, அதற்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை. ‘உபரி வருமானம் கிடைக்க வேண்டாம். உழைப்பும் போய் கையில் இருந்த பணமும் செலவாகிறதே. இது ஒத்து வராது’ என்றேன்.

‘தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி பெற முடியும்’ என்றார்.

தொடர்வதற்கும் காத்திருப்பதற்குமான சூழல் அப்போது எனக்கில்லை. அந்தந்த மாதத்திற்குரிய செலவுகளை ஈடு செய்ய உழைக்கவும் வருமானத்தை ஈட்டவுமான கடப்பாட்டில் நான் இருந்தேன். எனவே, மளிகை வியாபாரத்திலிருந்து ஒதுங்கி வேறு சிறு சிறு வியாபாரத்தில் ஈடுபட்டேன். அதன் காரணமாக அவரது உறவில் சற்று உரசல் ஏற்பட்டது.

ஒருவரிடமிருந்து அவர் ஒதுங்க நினைத்தால் எப்படி முயன்றாலும் திரும்ப ஒட்ட முடியாது என்பது எனக்குத் தெரியும். அந்த நிலை ஏற்பட்டு விடுமோ என அஞ்சினேன். சூழலும் அப்படித்தான் இருந்தது.

‘தமிழ் ஓசை பத்திரிகை என்பது என் வாழ்க்கையில் ஆதாரமாக விளங்கியது. ஆதி. குமணன் என்கிற ஆலமரம் நிழல் தந்து கொண்டிருந்தது. ஆனாலும், இராஜகுமாரனுடன் பேச முடியாத சூழலில் அங்கு பணியாற்றுவதை நடைப்பிண வாழ்க்கைக்கு ஒப்பானதாகக் கருதினேன்.

ஒருநாள் காலை நேரம். அவர் அலுவலகத்திற்கு வந்தவுடன், ஒரு கடிதத்தை நீட்டி “இந்த வாரத்தோடு வேலையை விட்டு விலகுகிறேன். பெட்ரோல் நிலையத்தில் வேலை கிடைத்திருக்கிறது. இரவில் லோரி உதவியாளராக வேலை செய்வேன். உங்களோடு பேசாமல் என்னால் இங்கு வேலை செய்ய முடியாது” என்றேன்.

கட்டிப் பிடித்துக் கொண்டார். ஆறுதல் கூறினார். சுமார் இரண்டு வாரப் பனிமூட்டம் அந்த விநாடியோடு விலகியது.

அன்றிலிருந்து எங்கள் நட்பில் உரசல் ஏற்படாமல் பாதுகாத்து வந்தேன். ஆனாலு, இயற்கை நிரந்தரப் பிரிவை ஏற்படுத்திவிட்டதே!

எனக்குத் தெரியும்!

என்றாவது ஒரு நாள் அவர் இருக்கும் இடத்தை நான் சென்றடைவேன்.

பெரும்பாலும் ஆதி. குமணன் நினைவிடத்திற்கு நானும் இராஜகுமாரனும் மட்டும் சென்று வருவோம். வேறு யாரும் இங்கு வந்து போகிறார்களா என்பது பற்றி பேசிக் கொள்வதுண்டு.

“நான் முந்திக் கொண்டால் நீங்க வருவீங்க! நீங்க முந்திக் கொண்டால் நான் வருவேன். அதன்பிறகு யார் வரப் போகிறார் என்பது யாருக்குத் தெரியும்” என்பார்.
உண்மைதான். நாங்கள் இருவரும்தான் ஆதி. குமணனின் அஸ்தியை நினைவிடத்தில் வைத்தோம். இப்போது அவர் முந்திக் கொண்டார். அவரது அஸ்தியை நெஞ்சோடு அணைத்து சுமந்து சென்று ஆதி.குமணனின் அருகில் இராஜகுமாரனுக்காக வாங்கி இருந்த இடத்தில் வைத்தேன்.

இனி, அருகில் இருப்பது ஓர் இடம். என்றாவது ஒரு நாள் வருவேன் அண்ணா! உங்களோடு இருப்பான்.

-பெ.இராஜேந்திரன், தலைவர், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்