Home நாடு “காந்தியின் மாணவன் நான் – அவரிடம் கற்றுக் கொண்டது மன்னிக்கும் தன்மை” – அன்வார் இப்ராகிம்

“காந்தியின் மாணவன் நான் – அவரிடம் கற்றுக் கொண்டது மன்னிக்கும் தன்மை” – அன்வார் இப்ராகிம்

1376
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மகாத்மா காந்தியின் 150 பிறந்த தினத்தை முன்னிட்டு மலேசியாவுக்கான இந்தியத் தாதரகம் ஏற்பாடு செய்திருந்த  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மகாத்மா காந்தியின் தத்துவங்களும், போதனைகளும் இன்றைக்கும் பொருத்தமாகவும் பின்பற்றக் கூடியதாகவும் இருப்பதாகக் கூறினார்.

மேலும், காந்தியின் மாணவன் நான் என்றும் அன்வார் இப்ராகிம் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். “காந்தியின் போதனைகளில் இருந்து என் வாழ்க்கையில் நான் முக்கியமாகக் கற்றுக் கொண்டதும் அண்மையில் பின்பற்றியதுமான ஒரு முக்கிய அம்சத்தைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எனக்கு துன்பம் இழைத்தவர்களையும் மன்னித்து ஏற்றுக் கொள்ளும் மாபெரும் பண்புதான் அது. மகாத்மா காந்தி மன்னிப்பது என்பதை ஒரு சிறந்த பண்பாக பல தருணங்களில் குறிப்பிட்டிருக்கிறார். எனது வாழ்க்கையிலும் அதைப் பின்பற்றக் கற்றுக் கொண்டேன். அது அவ்வளவு எளிதானது. அல்ல. மிக மிக சிரமமானதாக இருந்தது” என்றும் அன்வார் மனம் விட்டுக் கூறினார்.

“நான் எனக்கு எதிராகச் செயல்பட்டவர்களை மன்னிக்கக் கற்றுக் கொண்டேன். அதனை நான் செய்வதற்குக் காரணமாக இருந்தது மகாத்மா காந்தியின் போதனைகள்தான். நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலும், ஊழல், அதிகார வரம்பு மீறல்கள், இனரீதியான அரசியல் நடைமுறைகள் ஆகியவற்றிலிருந்து நாட்டு மக்களை விடுவிக்க வேண்டும் என்ற குறிக்கோளுக்காகவும், எனக்கும் என் குடும்பத்தாருக்கும் துன்பம் இழைத்தவர்களை மன்னிக்க நான் முடிவெடுத்தேன்” என்றும் அன்வார் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இன்றைய நவீன காலத்திலும் சில வரலாற்று சம்பவங்களில் காந்தியின் போதனைகள் தேவையானதாகவும், பொருத்தமானதாகவும் இருந்தன என்பதையும் அன்வார் சுட்டிக் காட்டினார்.

தொடர்ந்து மகாத்மா காந்தியின் நினைவுத் தபால் தலையையும் அன்வார் வெளியிட்டார்.


இதே நிகழ்ச்சியில் மலேசியாவுக்கான இந்தியத் தூதர் மிருதுள் குமார் உரையாற்றினார்.

அமரர் துன் வீ.தி.சம்பந்தன் அவர்களின் புதல்வி தேவகுஞ்சரி சம்பந்தன் தனது தந்தையார் பின்பற்றிய காந்திய தத்துவங்கள் குறித்தும் சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை என்ற தமிழ்ப் பள்ளியை நிறுவுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் குறித்தும் விளக்கினார்.

நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் போதனைகள் அடங்கிய காணொளி ஒன்றும் திரையிடப்பட்டது.

அமைச்சர்கள் குலசேகரன், சேவியர் ஜெயகுமார் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.