சுபாங் – சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலயத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் நிலம், நீர்வளம், இயற்கை வள அமைச்சர் சேவியர் ஜெயகுமார் மற்றும் கோடீஸ்வர வணிகர் வின்சென்ட் டான் இருவரும் வருகை தருவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அவர்களது வருகையை சேவியர் ஜெயகுமாரின் அலுவலகம் அறிவித்தது.
சீ பீல்ட் மாரியம்மன் ஆலயத்தை அதே இடத்தில் நிலை நிறுத்த, அந்த ஆலயம் அமைந்திருக்கும் இடத்தை நாமே பொதுமக்களிடம் நிதி திரட்டி வாங்குவோம் என வின்சென்ட் டான் அறிவித்திருந்தார். அந்த நிதிக்கு தனது பங்காக 5 இலட்சம் ரிங்கிட்டையும் வழங்குவதாக அவர் தெரிவிக்க அவரைத் தொடர்ந்து மேலும் இரு சீன வணிகர்கள் தலா 5 இலட்சம் ரிங்கிட் தருவதாக வாக்களிக்க தற்போது இந்த நிதிக்கு 15 இலட்சம் ரிங்கிட் சேர்ந்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து வின்சென்ட் டான் சீ பீல்ட் ஆலயத்திற்கு சேவியர் ஜெயகுமாருடன் வருகை தந்து ஆலயம் அமைந்திருக்கும் வளாகத்தைப் பார்வையிடுவார் என்றும் மேலும் சில அறிவிப்புகளையும் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.