Home நாடு “இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்ல – உலகத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பேன்” – செல்லியல் நேர்காணலில் இராமசாமி...

“இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்ல – உலகத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பேன்” – செல்லியல் நேர்காணலில் இராமசாமி (3)

1326
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – (செல்லியல் இணைய ஊடகத்திற்கென அதன் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் இந்த மூன்றாவது நிறைவுப் பகுதியில், பினாங்கு துணை முதல்வர் இராமசாமி, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கைத் தமிழ் மக்கள் குறித்தும் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துகிறார்)

கேள்வி: பினாங்கு துணை முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைக் கொண்டு நீங்கள் உள்நாட்டு இந்தியர் விவகாரங்களில் மட்டுமே பேச வேண்டும், தலையிட வேண்டும் மாறாக, இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தலையிடக் கூடாது என்ற ஒரு கருத்து நிலவுகிறதே! அதற்கான விளக்கம் என்ன?

பதில் : என்னைப் பொறுத்தவரையில் இது பொருந்தாத ஒரு கருத்து – ஒருவகையில் முட்டாள்தனமான கருத்து என்றுதான் கூறுவேன். மேலும் என்னைப் பற்றியும், எனது பின்புலம் பற்றியும் சரியாக அறியாதவர்கள் வைக்கும் கருத்து இது என நினைக்கிறேன். இதுகுறித்து இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி விரிவாக விளக்கவும் விரும்புகிறேன்.

#TamilSchoolmychoice

முதலாவதாக, எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளில் இருந்து கொண்டு நான் முறையாகச் செயல்படாமல் மற்ற அயல்நாட்டுத் தமிழர் விவகாரங்களில் தலையிட்டால் இத்தகைய குறைகூறல்களை ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால், உள்நாட்டு விவகாரங்களில், இந்தியர் விவகாரங்களில் நான் சளைக்காமல் குரல் கொடுத்து சட்டமன்றம், நாடாளுமன்றம், துணை முதல்வர் ஆகிய பொறுப்புகளில் இருந்து எனது பணிகளை நிறைவாகவே ஆற்றியிருக்கிறேன். அதுகுறித்து எந்தவிதப் புகார்களும் இதுவரை எழுந்ததில்லை.

மலேசிய மக்களுக்கான, இந்திய சமுதாயத்திற்கான எனது கடமைகளை முறையாக, நிறைவாக ஆற்றியிருக்கிறேன். எனது இலங்கைத் தமிழர் மீதான ஈடுபாட்டை இனம் சார்ந்த ஒன்றாக அல்லாமல் மனித உரிமைகள் மீதான எனது பங்களிப்பாகவே பார்க்கிறேன்.

1970-ஆம் ஆண்டுகளில் தொடங்கிய விடுதலைப் புலிகளின் போராட்டம் 2009-இல் ஒரு முடிவுக்கு வந்தது. 2003-ஆம் ஆண்டு வாக்கில் நார்வே அரசாங்கம் இலங்கையில் அமைதிப் பேச்சுகளை முன்னெடுத்தபோது, விடுதலைப் புலிகளின் இடைக்கால அரசாங்கம் அமைய முயற்சிகள் எடுக்கப்பட்டபோது அனைத்துலக ரீதியில் அதற்கான அரசியல் அமைப்பு சாசன செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அரசியல் அமைப்பை உருவாக்குவது, புதிய தமிழ் ஈழ அரசுக்கான சட்ட ரீதியான கட்டமைப்பு போன்ற விவகாரங்களில் எனக்கிருந்த கல்விப் பின்புலம், அனுபவம் ஆகியவற்றின் காரணமாக நான் இந்த குழுவில் இணைந்து கொள்ள – அமைதிப் பேச்சுகளில் பங்கு கொள்ள – அழைக்கப்பட்டேன்.

பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள்…

ஒரு நாட்டின் பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சி, போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சி அதிலும் தமிழர்களுக்கான பணி என்பதால் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டு செயல்பட்டேன். அந்தக் குழுவில் இலங்கையில் முன்னாள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞரும் (அட்டர்னி ஜெனரல்),  அமெரிக்காவின் உருத்திரகுமாரன் போன்றவர்களும் இடம் பெற்றார்கள். பாரிஸ், டப்ளின், சூரிக் என பல ஐரோப்பிய நகர்களில் இதற்கான சந்திப்புக் கூட்டங்கள் நடைபெற்ற போது நானும் அவற்றில் கலந்து கொண்டேன். எனது ஆலோசனைகளை வழங்கினேன்.

ஆனால், விடுதலைப் புலிகளின் தமிழ்ஈழ அரசியல் விவகாரங்களில் மட்டுமே நான் பங்கு கொண்டேன் என நீங்கள் நினைத்திருந்தால் அதுவும் தவறுதான். காரணம் நான் ஏற்கனவே, இந்தோனிசியாவின் சுமத்ரா தீவிலுள்ள ஆச்சே பிரதேசத்தில் எழுந்த தனிமாநிலப் பிரச்சனைகளின்போது, அதற்கான அமைதிக் குழுவில் இணைந்து இதேபோன்ற ஆலோசனைகளை வழங்க அழைக்கப்பட்டேன். அப்போதும் அதில் நான் இதே மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டேன்.

நான் தேசியப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியபோது அங்கு என்னிடம் படித்த ஆச்சே மாணவர்கள், எனது அரசியல் கல்விப் புலமையைக் கண்டு, ஆச்சே அமைதிக் குழுவில் பணியாற்றி உதவும்படி கேட்டுக் கொள்ள நானும் அதன்படி செய்தேன்.

ஆக, சுதந்திரப் போராட்டம், அமைதிப் பேச்சுகள், மனித உரிமைகளுக்கான எதிரான கொடுமைகளுக்கான தீர்வுகள் போன்ற நல்ல நோக்கங்களுக்காக இயங்கிய செயற்குழுக்களில்தான் நான் இணைந்து பணியாற்றினேனே தவிர, பயங்கரவாதத்திற்கு துணை போவதற்கோ, ஆயுதம் ஏந்திய போராட்டத்திற்கோ நான் ஆதரவு தெரிவித்தவன் இல்லை.

அதிலும், இலங்கைத் தமிழர்கள் எனது தொப்புள் கொடி உறவுகள் என்பதால் அவர்களுக்காக நான் கூடுதல் மகிழ்ச்சியுடன் எனது அறிவாற்றலையும், நேரத்தையும், உழைப்பையும் வழங்கினேன் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

இலங்கைத் தமிழர்கள் என்று மட்டுமில்லை – உலகம் எங்கும் எந்தப் பகுதியில் தமிழர்களுக்கு இன்னல்களோ, இடையூறுகளோ நேர்ந்தாலும் அதற்காக குரல் கொடுக்க நான் தயங்க மாட்டேன் என்பதோடு, என்னால் இயன்ற பங்களிப்பையும் – யார் என்ன சொன்னாலும் வழங்கியே தீருவேன்.

அதேவேளையில், நமது நாட்டில் அரசியல் ரீதியிலும், அரசாங்க ரீதியிலும் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புகளையும், கடமைகளையும் என்னால் இயன்ற அளவுக்கு நிறைவாக ஆற்றி வருவேன் என்றும் உறுதி கூறுகின்றேன்.

-நேர்காணல்: இரா.முத்தரசன்

பேராசிரியர் பி.இராமசாமியின் நேர்காணலின் முதல் இரண்டு பகுதிகளைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

  • “இந்தியர்களுக்கான எனது போராட்டக் குரல் என்றும் ஒலிக்கும்” – செல்லியல் சிறப்பு நேர்காணலில் இராமசாமி (1)
  • “தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைப்பதில் பின்வாங்க மாட்டோம்” – செல்லியல் நேர்காணலில் இராமசாமி (2)

காணொளி வடிவம்: