புத்ராஜெயா: தெமியார் பூர்வக்குடியினரின் நிலத்தை ஆக்கிரமித்ததற்காக, மத்திய அமைச்சரவையின் உத்தரவுபடி, நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 18) மலேசிய அரசாங்கம், கிளந்தான் மாநிலத்தின் மீது வழக்குத் தொடுத்தது.
இவ்விவகாரம் குறித்து கோத்தா பாரு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தார்.
“நாட்டில் முதல் முறையாக, மத்திய அரசாங்கம் பூர்வக்குடியினர் சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறது. கூட்டரசு அரசியலமைப்பு மற்றும் மத்திய அரசின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு, பூர்வக்குடியினரின் நலனைப் பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் அரசாங்கம் அக்கறைக் கொள்வதை இச்செயல்முறை காட்டுகிறது” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
“நிலம் மற்றும் வனத்துறை விவகாரங்கள் மாநில அரசாங்கத்தின் அதிகார எல்லைக்குள் உட்பட்டிருந்தாலும், பூர்வக்குடியினரின் நலனை அரசாங்கம் பாதுகாக்க வேண்டியுள்ளது” என டோமி கூறினார்.
கிளந்தான் மாநில அரசாங்கம் மற்றும் அதன் நிறுவனங்களும், குவா மூசாங்கில் உள்ள பூர்வக்குடியினரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்கு தனியார் நிறுவனங்கள் சிலவற்றிற்கு குத்தகையை வழங்கி உள்ளன. இவ்விவகாரமாக பூர்வக்குடியினரை கலந்தாலோசிக்காது செயல்பட்டதோடு, அவர்களுக்கான எந்தவொரு இழப்பீடும் தரப்படாமல் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாகக் கருதுகிறது.
இந்த வழக்கில் மத்திய அரசாங்கம் இலவசமாக பூர்வக்குடியினரை பிரதிநிதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.