Home நாடு “அறிவிப்பாளர்கள் இனி கவனமுடன் இருப்பார்கள்” டிஎச்ஆர் ராகா அறிக்கை

“அறிவிப்பாளர்கள் இனி கவனமுடன் இருப்பார்கள்” டிஎச்ஆர் ராகா அறிக்கை

1549
0
SHARE
Ad

கோலாலம்பூர் – டிஎச்ஆர் வானொலியின் அறிவிப்பாளர் உதயா, வானொலி நேயர் ஒருவருடன் நடத்திய உரையாடல் ஒன்று சமூக ஊடகங்களில்  சர்ச்சையாகியிருக்கும் விவகாரத்தில் டிஎச்ஆர் ராகா வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், “உதயா, மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கைகளிடமும், அவற்றின் வாசகர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதே சமயம், நடந்த சம்பவம் குறித்து காவல் துறையிலும் புகார் செய்திருக்கிறார். இனி வரும் காலங்களில் குறிப்பாக நேயர்கள் கூறும் கருத்துகளைக் கையாள்வதில் மேலும் அதிக கவனமுடன் இருக்குமாறு டிஎச்ஆர் ராகா நிர்வாகம் தனது அறிவிப்பாளர்களை அறிவுறுத்தியுள்ளது” என அந்த அறிக்கை தெரிவித்தது.

உதயாவும் மன்னிப்பு அறிக்கை

இந்த விவகாரத்தில் காணொளி ஒன்றின் வழி தனது கருத்துகளுக்கு ஏற்கனவே உதயா மன்னிப்பு தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், நேற்று வியாழக்கிழமை, டிஎச்ஆர் ராகா நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றின்வழி உதயா மீண்டும் தனது மன்னிப்பைத் தெரிவித்துள்ளார்.

“வானொலி அறிவிப்பாளர் என்ற முறையில் குறிப்பிட்ட நேயரின் கருத்தைக் கேட்கும் பொறுப்பும் கடப்பாடும் எனக்கிருந்தது. அந்நேயருடனான உரையாடல் ராகாவிலோ அல்லது ராகா தொடர்புடைய சமூக வலைத் தளங்களிலோ எந்த நேரத்திலும் ஒலியேற்றப்படவோ, பதிவேற்றப்படவோ இல்லை. இருந்தாலும், சம்பந்தப்பட்ட நேயர் அந்த முழு உரையாடலையும் அவராகப் பதிவு செய்து, தனது பெயரை நீக்கி விட்டு வாட்ஸ் எப் சமூக ஊடகத்தில் பகிர, அது பரவி விட்டது. அச்செயலானது, என்னைச் சிக்க வைத்து ஓர் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளும் முயற்சியே எனக் கருதுகிறேன். நடந்த சம்பவத்திற்காக மலேசியாவில் உள்ள அனைத்துத் தமிழ்ப் பத்திரிகைகளிடமும் வாசகர்களிடமும் நான் மனதார மன்னிப்புக் கோருகிறேன்” என அந்த பத்திரிகை அறிக்கையில் உதயா தெரிவித்திருக்கிறார்.

தமிழ்ப் பத்திரிகைகளின் ஒருமித்த கண்டனம்

இதற்கிடையில் நேற்று வியாழக்கிழமை அனைத்து தமிழ் நாளிதழ்களும் முதல் பக்கத்தில் உதயா கூறிய சர்ச்சைகளுக்குக் கண்டனம் தெரிவித்ததோடு, அவர் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தன.

நேற்றைய நாளிதழ்களில் உதயாவின் செயலைக் கடுமையாகச் சாடிய கட்டுரைகள் வெளியிடப்பட்டதோடு, தமிழைக் கொண்டு வருமானம் ஈட்டுபவர்கள் தமிழையே சீரழிக்கும் தன்மையையும் அந்தக் கட்டுரைகள் கடுமையாகச் சாடியிருந்தன.

தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் முத்தமிழ் மன்னனும் (படம்) தங்களின் கடுமையானக் கண்டனங்களை ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உதயா டிஎச்ஆர் ராகாவிலிருந்து இடைக்காலத்திற்குப் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என அதிகாரபூர்வமற்ற தகவல் ஒன்று தெரிவிக்கிறது.