ஷா அலாம்: முன்னாள் அம்னோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எழுவரை பிரதமர் துன் மகாதீர் முகமட் பெர்சாத்து கட்சியில் இணைத்துக் கொண்டதைக் குறித்து, சிலாங்கூர் மாநில ஜசெக கட்சியின் செயலாளர் ரோனி லியூ வருத்தம் தெரிவித்துக் கொண்டார். பிரதமரின் இந்த நடவடிக்கை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பொதுத் தேர்தலுக்கு முன்பு, அம்னோ கட்சியின் உறுப்பினர்களை தாம் பெர்சாத்து கட்சியில் இணைத்துக் கொள்ளப்போவதில்லை என பிரதமர் கூறியதை ரோனி நினைவூட்டினார். அவ்வாறு அவர் கூறிய போது தாம் அங்கிருந்ததாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதே மாதிரியான சூழல் ஏற்பட்டால், இவ்வாறு அம்னோவை விட்டு வெளியேறும் அனைவரையும் பிரதமர் ஏற்றுக் கொள்வாரா என ரோனி கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கிடையே, நேற்று (செவ்வாய்க்கிழமை) அம்னோ கட்சியிலிருந்து வெளியான, ஆறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெர்சாத்து கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.