சண்டாகான் – மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோ டாக்டர் ஹமிட் சுல்தான் அபு பாக்கர், தனது உறுதிமொழி ஆவணத்தின் ( affidavit) வழி வெளிக் கொண்டு வந்திருக்கும் நீதித்துறை ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் வலியுறுத்தியிருக்கிறார்.
நீதிபதி ஹாமிட் சுல்தான் சுமார் 63 பக்கங்கள் கொண்ட அந்த உறுதிமொழி ஆவணத்தை கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்கொன்றின் தொடர்பில் சமர்ப்பித்திருந்தார். நீதித் துறை முறைகேடுகள், தலையீடுகள் குறித்த பல அதிர்ச்சி தரும் விவரங்கள் அந்த ஆவணத்தில் பட்டியலிடப்பட்டிருந்தன.
நீதிமன்ற வழக்குகளில் நீதித் துறை தலையீடு இருந்தது என்பது போன்ற குற்றச்சாட்டுகளை ஹாமிட் சுல்தானின் உறுதிமொழி ஆவணம் உள்ளடக்கியிருப்பதால் இதனைக் கடுமையாகக் கருத வேண்டும் என்றும் இஸ்கண்டார் புத்திரி நாடாளுமன்ற உறுப்பினரான கிட் சியாங் மேலும் கூறினார்.
ஜசெகவின் முன்னாள் தலைவர் கர்ப்பால் சிங், பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆகியோர் மீதான வழக்குகளில் தலையீடு இருந்ததாகத் தெரிய வந்திருப்பதால் இவற்றையெல்லாம் விசாரிக்கப் பொருத்தமான களம் அரச விசாரணை வாரியம்தான் என நேற்று சண்டாகானில் நடைபெற்ற ஜசெக சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டபோது லிம் கிட் சியாங் கூறினார்.
இதன் தொடர்பில் கருத்துரைந்த பிரதமர் துன் மகாதீரும், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அரச விசாரணை வாரியம் அமைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் எனத் தெரிவித்திருந்தார்.