கோலாலம்பூர்: அமைச்சர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஓரினச் சேர்க்கை காணொளி குறித்த விசாரணை ஆவணங்கள் கிடைத்த பின்னர் அஸ்மின் அலியை கைது செய்ய வேண்டுமா இல்லையா என்று அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகம்தான் முடிவு செய்யும் என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.
“இந்த விவகாரத்தை காவல்துறை குழு கையாளுகிறது. அவர்கள் தங்கள் வேலையைச் செய்யட்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை சட்டத்திற்கு உட்பட்டு நடத்தப்படுகிறது என்றும், யாரும் நியாயமற்ற முறையில் நடத்தப்பட மாட்டார்கள் என்றும் ஹாமிட் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இந்த விவகாரத்தில் முக்கியமான விவகாரங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், அவரது அதிகாரிகள் முழுமையான விசாரணையை நடத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
அரசியல் விவகாரத்திற்குள் தம்மை இழுக்கப்படுவதை விரும்பவில்லை என்றும் ஹாமிட் மீண்டும் நினைவூட்டினார்.
நேற்று செவ்வாய்க்கிழமை, பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் அரசியல் செயலாளர் பார்ஹாஷ் வாபா சால்வடார், காவல் துறைத் தலைவரை அஸ்மினை கைது செய்யுமாறு சவால் விடுத்திருந்தார்.