கோலாலம்பூர் – நாம் எப்போதும் சொல்வது போல் விமர்சனத்தைப் பார்க்காமல் மக்கள் சென்று பார்க்கும் படங்களுக்கான கதாநாயக நடிகர்களில் ஒருவர் அஜித். “நேர்கொண்ட பார்வை” படத்தைத் தேர்ந்தெடுத்து நடித்ததற்கும் அஜித்துக்கு உண்மையிலேயே பாராட்டு வழங்க வேண்டும். அவ்வளவு உயரத்துக்குப் போய்விட்ட அவர், சக நடிகர்களுக்கு இடம் கொடுத்தும், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தும் நடித்திருக்கிறார்.
ஏற்கனவே, இந்தியில் வெற்றி வாகை சூடிய “பிங்க்” படத்தின் கதைதான் என்றாலும், அந்த வாடையே இல்லாத அளவுக்கு, அதன் அடிப்படைக் கதையை மட்டும் வைத்துக் கொண்டு, தமிழ் நாட்டுக்கே உரிய பாணியிலும், அஜித்தை மனதில் வைத்தும் திரைக்கதையை மாற்றியமைத்திருக்கிறார் இயக்குநர் எச்.வினோத். ஏற்கனவே, சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களின் மூலம் திரையுலகின் பார்வையைத் தன்பக்கம் திருப்பியவர் இவர்.
படத்தையே தூக்கி நிறுத்தும்அஜித்

பிங்க் படத்தில் வயது முதிர்ந்த வழக்கறிஞராக வந்து இன்னொரு பரிமாண நடிப்பை அமிதாப் பச்சன் காட்டினார் என்றால், இந்தப் படத்தில் நமக்கு அமிதாப்பை பற்றிய நினைவே இல்லாதபடி தனது நடிப்புத் திறனைக் காட்டியிருக்கிறார் அஜித்.
மனநோயோடும், கைநடுக்கத்தோடும் அவர் முதல் சில காட்சிகளில் சிரமப்படுவதில் தொடங்கி, நேரத்தோடு மருந்து எடுக்க முடியாமல் திணறுவது, பூங்காவில் நடத்தும் ஆக்ரோஷமான சண்டை, தனது இரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வண்ணம் செல்வாக்குமிக்க ஜெயப்பிரகாஷ் வீட்டிலேயே நுழைந்து நடத்தும் அதகளம், படத்தின் தலைப்புக் கேற்ப கூர்மையோடு விடுக்கும் மிரட்டல் பார்வை, படத்தின் பின்பாதியில் முழுக்க முழுக்க நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குக் காட்சிகளில் நின்று நிதானித்து ஒவ்வொரு சொல்லையும் ஆழத்தோடும், அதன் தாக்கம் கெடாமலும் உச்சரிக்கும் இலாவகம், இப்படியாக – படம் முழுக்க வந்து தனது நடிப்பின் ஆளுமையையும், புதிய பரிமாணத்தையும் காட்டியிருக்கிறார் அஜித்குமார்.
அவர் ஏன் மனநலம் குன்றியிருக்கிறார் என்பதற்காக காட்டப்படும் – வித்யாபாலன் மனைவியாக வரும் – சில காட்சிகள் ஏனோ மனதில் ஒட்டவில்லை. இந்தியில் இத்தகைய காட்சிகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஜித்துக்கென உருமாற்றப்பட்ட திரைக்கதை
பணக்காரப் பையன்கள் மூவரோடு உல்லாசமாகப் பொழுது போக்க நினைத்த மூன்று நவநாகரிகப் பெண்களுக்கு ஒரு நாள் இரவில் நடக்கும் எதிர்பாராத சம்பவம் – அதைத் தொடர்ந்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் – பணக்காரப் பையன்கள், பெண்கள்தானே என நினைத்து கொடுக்கும் தொந்தரவுகள் – காவல் துறை, அதிகாரிகள் என பலரும் பணம் வாங்கிக் கொண்டு, பணக்காரப் பையன்களின் தவறுகளை மறைத்து, பெண்கள் மீது வழக்கைத் திருப்பி விடுவது – அதை எதிர்த்து, பெண்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் வழியாக, தனது உடல்நலக் குறைவுக்கிடையிலும் அஜித் நடத்தும் போராட்டம் – இறுதியில் அதில் வெற்றியடைந்தாரா? – என்பதுதான் திரைக்கதை.

அஜித் இருக்கிறார் என்பதற்காக பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் – வில்லன்களோடு சவால் என சில காட்சிகளைச் சேர்த்தும் – வித்யா பாலனோடு ஒரு பாடல், சில காதல் காட்சிகள் – என இயக்குநர் சமரசம் செய்திருந்தாலும், அவை பொருத்தமாகவே அமைந்திருக்கின்றன. மற்றபடி தேவையற்ற காட்சிகள் ஏதுமின்றி, வழக்கை மையமாக வைத்தே – கதையை நகர்த்தியிருக்கிறார் வினோத்.
கவரும் மற்ற அம்சங்கள்
பாதிக்கப்பட்ட மூன்று பெண்களாக வரும் ஷரத்தா ஸ்ரீநாத், அபிராமி (பிக்பாஸ் 3 தொடரில் வரும் அதே அபிராமிதான்) அண்ட்ரியா தரியாங் மூவருமே தங்களின் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
அஜித்துக்கு நிகராக, இடைவேளைக்குப் பின்னர் சரிசமமாக சத்தியமூர்த்தி என்ற வழக்கறிஞராக வருகிறார் பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே. முதல் படம் என்பதே தெரியாத அளவுக்கு இயல்பாக நடித்தும், அதே சமயம் குரூரமான முறையில் வழக்கை நடத்தும் முறையிலும் கவர்கிறார். தனது பாணியிலேயே கேள்விகளை கலகலப்பான பாணியில் நீதிமன்றத்தில் தொடுக்கிறார்.
பணக்காரப் பையனாக வரும் அர்ஜூன் சிதம்பரமும் கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
நீதிமன்றக் காட்சிகளில் அஜித்தை அவ்வளவு தெளிவாகக் காட்டியிருப்பதிலும், பூங்காவில் நடக்கும் சண்டைக் காட்சியின் முடிவில், தண்ணீர்க் குழாய் உடைந்து பிரம்மாண்டமாக தெறித்து எழும் நீர்ப் பிரவாகத்தின் பின்னணியில் அஜித் நிற்கும் காட்சியிலும் தனித்து நிற்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா!
பாடல் சுமார்தான் என்றாலும், பின்னணிக் காட்சியில் தனது திறமையைக் காட்டி காட்சிகளுக்கு மெருகேற்றியிருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.
படத்தின் இறுதிக் காட்சியில் இரண்டு கைகுலுக்கல்கள் படத்தைப் பார்த்த நமக்கும் மனநிறைவைத் தருகின்றன. ஒன்று ரங்கராஜ் பாண்டே வழக்கறிஞர் என்ற முறையில் தொழில் ரீதியாக அஜித்துக்குக் கொடுக்கும் கைகுலுக்கல். இன்னொன்று, வழக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நீதிமன்றக் காவல்துறை பெண்மணி வழக்கு முடிந்து வெளியே வரும் அஜித்துக்கு நன்றியோடு கொடுக்கும் கைகுலுக்கல்.

கோடிக்கணக்கான வணிக வாய்ப்பைக் கொண்டிருக்கும் ஹீரோ நடிகர்கள் தங்களையே புகழ்ந்து பாடும் முதல் (ஓபனிங்) பாடல், வெளிநாடுகளில் காதல் காட்சிகள், பிரம்மாண்டமான அரங்குகளோடு கூடிய ஆடம்பரப் படப்பிடிப்பு, நான்கு சண்டைக் காட்சிகள் என்பதுதான் மாஸ் ஹீரோத்தனம் என நடித்துக் கொண்டிருக்க, இதுபோன்ற எளிமையான – அதே சமயம் பெண்களுக்கான உரிமைகள், சுதந்திரத்தை வலியுறுத்தும் வலிமையான கதை அமைப்பைக் கொண்ட ஒரு படத்தில் நடிப்பது கூட ஹீரோத்தனம்தான்!
அந்த வகையில் அஜித் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக தனித்து, உயர்ந்து நிற்கிறார்.
“நேர்கொண்ட பார்வை” அனைவரும் – குறிப்பாக பெண்கள் பார்க்க வேண்டிய படம்!