Home One Line P1 “நண்பர்கள் எப்போதும் நண்பர்கள்தான்” : அன்வார் – குவான் எங் சந்திப்பு

“நண்பர்கள் எப்போதும் நண்பர்கள்தான்” : அன்வார் – குவான் எங் சந்திப்பு

643
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – நம்பிக்கைக் கூட்டணியின் சார்பில் அடுத்த பிரதமர் என்பதில் ஜசெக-பிகேஆர் கட்சிகளுக்கிடையில் மோதல்கள், முரண்பாடுகள் எனச் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 3) அன்வார் இப்ராகிமும், லிம் குவான் எங்கும் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

அன்வாரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்த புகைப் படத்தைப் பதிவிட்ட அன்வார் “நண்பர்கள் எப்போதும் நண்பர்கள்தான்” என்ற வாசகத்தையும் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

அடுத்த வாரம் நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் சந்திப்புக் கூட்டம் நடத்தி அடுத்த பிரதமர் குறித்த தங்களின் முடிவை அறிவிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி அமானா கட்சித் தலைவர் முகமட் சாபுவையும் அன்வார் தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளார்.

அதைத் தொடர்ந்து நேற்று ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கை அன்வார் சந்தித்தார்.

பிரதமர் தேர்வில் முரண்பாடுகள்

கடந்த ஜூலை 1-ஆம் தேதி சந்திப்பு நடத்திய முகமட் சாபு – அன்வார் இப்ராகிம்

துன் மகாதீரை அடுத்த பிரதமராக ஏற்றுக் கொள்ள முடியாது என பிகேஆர் முடிவெடுத்ததைத் தொடர்ந்து சர்ச்சைகள் தொடங்கின.

அன்வார் மலாய்க்காரர் கட்சி ஒன்றின் தலைவர் இல்லை என்பதால் அவருக்கு மலாய்க்கார சமூகத்தின் இல்லை என மகாதீர் பதிலடியாகக் கருத்துரைத்தார்.

ஷாபி அப்டாலைப் பிரதமராக முன்நிறுத்தி துன் மகாதீர் புதிய பரிந்துரை ஒன்றையும் முன்மொழிந்தார். இந்தப் பரிந்துரை அரசியல் பார்வையாளர்களிடையேயும், சமூக ஊடகங்களிலும் பலத்த சர்ச்சைகளைத் தோற்றுவித்தது.

துணைப் பிரதமர்களாக அன்வார் இப்ராகிமையும், முக்ரிஸ் மகாதீரையும் இந்தப் பரிந்துரை முன்மொழிந்தது.

ஆனால் பின்னர் “முக்ரிஸ் மகாதீரை இரண்டாவது துணைப் பிரதமராக நான் முன்மொழியவில்லை. மாறாக, அமானா தலைவர் முகமட் சாபு, ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்தான் அந்தப் பரிந்துரை காணப்பட்டது” என துன் மகாதீர் விளக்கமளித்தார்.

கடந்த மே 30-ஆம் தேதி நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அன்வாரைப் பிரதமராகவும் முக்ரிஸ் மகாதீரை துணைப் பிரதமராகவும் பரிந்துரைக்கும் திட்டம் முன்மொழியப்பட்டதாக குவான் எங், முகமட் சாபு இருவரும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கையைத்தான் மகாதீர் மேற்கோள் காட்டியிருந்தார்.

அடுத்த பிரதமரா? ஷாபி அப்டாலின் முடிவு என்ன?

துன் மகாதீருக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட ஷாபி அப்டால் இதுகுறித்து மேலும் சிந்தித்து தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கப் போவதாகவும் அறிவித்தார். ஆனால் இன்னும் எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.

ஷாபி அப்டாலை அடுத்த பிரதமராக ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது குறித்து விவாதிக்க நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் எதிர்வரும் வாரத்தில் சந்திப்பு நடத்தவிருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில்தான் அன்வார், முகமட் சாபு, லிம் குவான் எங் இருவரையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

இதற்கிடையில், மொகிதின் யாசினின் அடுத்த கட்ட நகர்வுகள் 15-வது பொதுத் தேர்தலை நோக்கியதாக அமைந்திருக்கின்றன.

கடந்த புதன்கிழமை (ஜூலை 1) புத்ரா ஜெயாவில் தேசியக் கூட்டணி உறுப்பியக் கட்சிகளின் தலைவர்களோடு மொகிதின் யாசின் சந்திப்பு நடத்தியிருக்கிறார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து அம்னோ, பாஸ், பெர்சாத்து கட்சிகள் சரவாக் ஜிபிஎஸ் கூட்டணிக்கு ஆதரவாக எதிர்வரும் மாநிலத் தேர்தலில் போட்டியிடாது என சரவாக் துணை முதலமைச்சர் ஜேம்ஸ் மாசிங் அறிவித்திருந்தார்.

சரவாக் மாநிலத் தேர்தல் நடத்தப்படும் சமயத்தில் நாடாளுமன்றத்தையும் கலைத்து விட்டு ஒரேயடியாக பொதுத் தேர்தலை நடத்த மொகிதின் யாசின் உத்தேசித்துள்ளார் எனத் தெரிகிறது.

இதன் மூலம் சரவாக் மாநிலத் தேர்தலில் ஜிபிஎஸ் கூட்டணிக்கு ஆதரவான சூழ்நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத் தேர்தலோடு, சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டால், தீபகற்ப மலேசியாவின் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரங்களுக்காக சரவாக் மாநிலம் செல்ல மாட்டார்கள். தாங்கள் போட்டியிடும் தொகுதிகளைக் கண்காணிக்க அங்கேயே கவனம் செலுத்துவார்கள்.

இதனால், சரவாக் மாநில சட்டமன்றத்தை ஜிபிஎஸ் கூட்டணி மீண்டும் சுலபமாகக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.