Home One Line P2 “டிக் டாக்” – அமெரிக்காவும் தடைசெய்யக் கூடும்

“டிக் டாக்” – அமெரிக்காவும் தடைசெய்யக் கூடும்

678
0
SHARE
Ad

வாஷிங்டன் : “டிக் டாக்” குறுஞ்செயலியை தடைசெய்ய அமெரிக்காவும் ஆலோசித்து வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக் போம்பியோ அறிவித்தார்.

டிக் டாக் மட்டுமின்றி சீனாவின் மற்ற குறுஞ்செயலிகளைத் தடைசெய்யவும் அமெரிக்கா தீவிரமாக ஆலோசிக்கிறது எனவும் போம்பியோ மேலும் தெரிவித்தார்.

இந்தியா-சீனா எல்லைப் புற மோதல்களைத் தொடர்ந்து அண்மையில் இந்தியா சீனாவின் “டிக் டாக்” உள்ளிட்ட 59 குறுஞ்செயலிகளை தடை செய்தது. இதனால் சீனாவின் மின்னிலக்க (டிஜிடல்) கட்டமைப்பு பெரும் பின்னடைவை எதிர்நோக்கியதாக ஊடகங்கள் கணித்திருக்கின்றன.

#TamilSchoolmychoice

ஏற்கனவே, சீனாவுடனான வணிகப் போரை மும்முரமாக நடத்தி வரும் அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்தக் குறுஞ்செயலி தடை கருதப்படுகிறது.

அமெரிக்கா ஏற்கனவே விதித்திருக்கும் தடைகளால் வாவே போன்ற நிறுவனங்கள் பெரும் தடுமாற்றத்தில் சிக்கியுள்ளன. தனது 5ஜி தொழில்நுட்பத்தை முன்னெடுப்பதில் வாவே கடும் சவால்களை எதிர்நோக்கியிருக்கிறது.

“சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் கைகளுக்கு உங்களின் தனிப்பட்ட தகவல்கள் சென்று சேர வேண்டுமெனத் தாங்கள் விரும்பினால் மட்டுமே நீங்கள் டிக் டாக்கை பதிவிறக்கம் செய்ய வேண்டும்” எனவும் போம்பியோ எச்சரித்தார்.

இதற்கிடையில் ஹாங்காங்கில் நிலவி வரும் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு அங்கிருந்து வெளியேறவிருப்பதாகவும் டிக் டாக் அறிவித்திருக்கிறது.

போம்பியோவின் கருத்துகள் நேற்று திங்கட்கிழமை (ஜூலை 6) வெளியிடப்பட்டன.

அதைத் தொடர்ந்து டிக்டாக் பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

“டிக் டாக் அமெரிக்காவின் தலைமைச் செயல் அதிகாரியைக் கொண்டு வழிநடத்தப்படுகிறது. நூற்றுக்கணக்கானோர் இங்கு பணிபுரிகின்றனர். அமெரிக்காவின் பொதுக் கொள்கை, பாதுகாப்பு, தரம் ஆகியவற்றுக்கு நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் வழங்குகிறோம்” என டிக் டாக் அந்த அறிக்கையில் தெரிவித்தது.

“எங்களின் தரவுகள் மையங்கள் சீனாவுக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கின்றன. சீனாவின் நிறுவனத்தால் நடத்தப்பட்டாலும் நாங்கள் தனியாக இயங்குகிறோம். அமெரிக்கர்களின் தரவுகள் அமெரிக்காவில்தான் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தரவுகளின் இரண்டாம் கட்டப் பாதுகாப்புக்காக அவை சிங்கப்பூரில் வைக்கப்பட்டிருக்கின்றன. சீனாவின் சட்டங்கள் எதுவும் எங்களைக் கட்டுப்படுத்தாது” என்றும் டிக்டாக் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.