Home One Line P2 கூகுள், அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் 4.5 பில்லியன் முதலீடு

கூகுள், அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் 4.5 பில்லியன் முதலீடு

760
0
SHARE
Ad

மும்பை – முகேஷ் அம்பானியின் ஜியோ பிளாட்போர்ட் நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்கிறது. இதன்மூலம் அந்நிறுவனத்தில் 7.7 விழுக்காட்டுப் பங்குகளை அந்நிறுவனத்தில் கூகுள் கொண்டிருக்கும்.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுளும், ஜியோவும் இணைவது பங்கு முதலீட்டாளர்களிடையே பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஒருசேரத் தோற்றுவித்திருக்கிறது.

பரந்து விரிந்த அம்பானியின் வணிக உலகின் மையமாக முக்கிய அங்கம் வகிப்பது அவரது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமாகும். அதன் துணை நிறுவனமான ஜியோ பிளாட்போர்ம் அம்பானியின் மின்னிலக்கத் துறைக்கான (டிஜிட்டல்) முக்கிய நிறுவனமாகத் திகழ்கிறது.

#TamilSchoolmychoice

கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களை உலகமெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து அம்பானி தனது ஜியோ பிளாட்போர்ம் நிறுவனத்திற்காகப் பெற்றிருக்கிறார்.

அந்த வரிசையில் கூகுளும் தற்போது இணைந்திருக்கிறது. கடந்த புதன்கிழமையன்று கூகுள் ஜியோவில் முதலீடு செய்யும் அறிவிப்பை வெளியிட்டது.

இந்த முதலீட்டைக் கொண்டு பார்க்கும்போது ஜியோவை 58 பில்லியன் டாலர்களுக்கு கூகுள் மதிப்பிடுகிறது. 388 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டு இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ பிளாட்போர்ம் திகழ்கிறது.

கூகுள், ஜியோ மூலம் வழங்கப் போவது என்ன?

இந்த முதலீட்டின் மூலம் கூகுள் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தத்தின்வழி அனைவரும் வாங்கக் கூடிய விலையிலான புதிய திறன்பேசிகளை (ஸ்மார்ட்போன்) கூகுள் இந்தியாவில் உருவாக்கும். இந்தியாவின் அனைத்து மூலை முடுக்குகளிலும் மின்னிலக்கமயமாக்குவது கூகுளின் மற்றொரு இலக்காகும்.

கூகுள் நிறுவனம் அடுத்து வரும் ஆண்டுகளில் 10 பில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்வதாக அண்மையில் அறிவித்தது. அந்நாட்டின் 1 பில்லியன் மக்களுக்கு இணையத்தை மலிவாகவும் பயனுள்ள வகையிலும் கொண்டு சேர்க்க இந்த முதலீடுகள் பயன்படுத்தப்படும் என்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கடந்த திங்கட்கிழமை  அறிவித்தார்.

அந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில இரண்டு நாட்களிலேயே ஜியோவில் முதலீடு செய்யும் அறிவிப்பை கூகுள் வெளியிட்டது.

கூகுள் இந்தியாவில் மேற்கொள்ளவிருக்கும் முதலீடுகள் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும். இந்தியாவின் தொழில்நுட்பத் துறையில் பங்கு முதலீடுகள், கூட்டு வணிக பங்களிப்புகள், கட்டமைப்பில் மேம்பாடுகள் எனக் கலவையான வகையில் இந்த முதலீடுகளை கூகுள் மேற்கொள்ளும்.

இந்தியாவில் கணினிமயமாகுதல் என்னும்போது ஒவ்வொரு மொழியிலும் அந்தத் தொழில்நுட்ப மேம்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும். இந்தியாவில் 22 மொழிகள் அதிகாரத்துவ மொழிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே, கூகுளின் முதலீடுகள் ஒவ்வொரு இந்தியனும் அவனுடைய தாய்மொழியில் புதிய உருவாக்கங்கள், சேவைகளைப் பெறும் வண்ணம், இந்தியாவுக்கே உரிய தேவைகளுக்கேற்ப மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வணிகங்கள் மின்னிலக்க உருமாற்றங்களுக்கு மாற உதவுவது, சமூக நலன்களுக்காக தொழில் நுட்பத்தையும், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றையும் பயன்படுத்துவது ஆகிய இலக்குகளையும் கூகுளின் இந்திய முதலீடுகள் கொண்டிருக்கும்.

சுகாதாரம், கல்வி, விவசாயம் ஆகிய துறைகளின் மேம்பாடுகளிலும் கூகுள் கவனம் செலுத்தும்.

இணைய, கணினித்துறையில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா

இந்தியா, உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் இணையச் சந்தையாகும். தற்போது சுமார் 700 மில்லியன் இணையப் பயனர்களை கொண்டிருக்கிறது இந்தியா. எதிர்வரும் ஆண்டுகளில் இதே எண்ணிக்கையிலான புதிய பயனர்கள் சந்தைக்குள் வருவர் என கணிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களை உலகமெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றிருக்கிறார் அம்பானி. இதைத் தொடர்ந்து அவரது ரிலையன்ஸ், கடன்களற்ற நிறுவனமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஜூன் 19 வெளியிட்ட அறிக்கை ஒன்றின் வழி ரிலையன்ஸ் தற்போது தனது நிறுவனக் கடன்களை முழுவதுமாக அடைத்து விட்டதாக முகேஷ் அம்பானி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கூகுளின் 4.5 பில்லியன் டாலர் முதலீடு ஜியோ – ரிலையன்ஸ் பங்குகளின் மதிப்பை மேலும் பன்மடங்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பானி முன்னெடுத்த முதலீடுகளினால் இந்த ஆண்டில் ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் அதிகமான முதலீடுகளை ஈர்த்த நாடாக இந்தியா திகழ்கிறது. மொத்த முதலீட்டில் 12 விழுக்காடு இந்தியாவைச் சென்றடைந்திருக்கிறது. இதில் பெரும்பகுதி அம்பானியின் நிறுவனங்களுக்குச் சென்றுள்ளன.

இத்தகைய முதலீடுகளினால் அவரது நிறுவனத்தின் பங்குகளும் இரண்டு மடங்காக விலையுயர்ந்திருக்கின்றன.

150 பில்லியன் டாலர்களுக்கும் மேற்பட்ட சந்தை மதிப்பைக் கொண்ட முதல் இந்திய நிறுவனமாக அவரது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவெடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து அவரது சொத்து மதிப்பு 68.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. உலகின் எட்டாவது மிகப் பெரிய பணக்காரராகவும் ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரராகவும் முகேஷ் அம்பானி உயர்ந்திருக்கிறார்.