சென்னை : இன்று புதன்கிழமை (செப்டம்பர் 9) நடைபெற்ற திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் துணைப் பொது செயலாளர்களாக ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் துணை பொதுச் செயலாளர்களின் எண்ணிக்கை 3 ல் இருந்து 5 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் துணை பொது செயலாளர்களாக உள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 3) நடைபெற்ற திமுக தேர்தலில் துரைமுருகன் பொதுச் செயலாளராகவும், டி.ஆர்.பாலு பொருளாளராகவும் போட்டியின்றி தேர்வு பெற்றனர்.
இன்று திமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் முதன் முறையாக இயங்கலை வழியாக நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் இருந்து காணொளி வாயிலாக பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். தலைமை அலுவலகத்தில் இருந்து 70 பேர் பங்கேற்றனர்.
திமுகவின் பொதுச் செயலாளராக கடந்த காலங்களில் அண்ணாதுரை, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் பதவி வகித்திருக்கின்றனர்.
“கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருந்து இவ்வளவு பெரிய பதவிக்கு வந்துள்ளது பயம் கலந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி தேர்வுக்குப் பின்னர் பேசிய துரைமுருகன் கூறினார்.
கடந்த காலங்களில் எம்ஜிஆர், மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் திமுக பொருளாளர் பதவியை வகித்திருக்கின்றனர்.
இதற்கிடையில் திமுகவின் உயர்நிலைப் பொறுப்புகளுக்கான நியமனங்களில் தமிழகத்தின் முக்கிய சமூகங்கள் முறையாகப் பிரதிநிதிக்கப்படவில்லை என்ற குறைகூறல்கள் எழுந்திருக்கின்றன.
இன்றைய பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் அடுத்த 8 மாதங்களில் திமுக கண்டிப்பாக மாநில ஆட்சியைப் பிடிக்கும் என சூளுரைத்தார்.