கோத்தா கினபாலு: தேசிய முன்னணியின் வேட்பாளர் பெயர் பட்டியலில் மூசா அமான் இடம்பெறவில்லை என்று தேசிய முன்னணி தலைவர் புங் மொக்தார் உறுதியாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தாம் சுங்கை மணிலாவில் போட்டியிட உள்ளதாக மூசா அமான் கூறியது, குறித்து எந்தவொரு பேச்சு வார்த்தையும் இல்லை என்று அவர் கூறினார்.
“அவரது பெயர் தேசிய முன்னணி வேட்பாளர் பட்டியலில் இல்லை” என்று அவர் கூறினார்.
தேசிய முன்னணி இன்று காலை வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், தற்போது அது மாலையில் அல்லது இரவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், லிபாரான் நாடாளுமன்றத் தொகுதியில் 13 புதிய சட்டமன்றங்களில் ஒன்றான சுங்கை மணிலா தொகுதியில் போட்டியிடுவதாக டான்ஸ்ரீ மூசா அமான் நேற்று அறிவித்திருந்தார் .
முன்னாள் சபா முதலமைச்சரும், சுங்கை சிபுகா சட்டமன்ற உறுப்பினருமான அவர், தாம் சுங்கை மணிலாவில் போட்டியிடுவதாக தமது முகநூல் பக்கத்தில் கூறியிருந்தார்.
“நான் மீண்டும் சுங்கை மணிலாவுக்குச் செல்கிறேன்,” என்று அவர் பதிவிட்டார்.
ஆனால், இந்த விவகாரம் இன்னும் சபா அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடினுடன் பேச்சுவார்த்தைகளில் உள்ளது என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.
13-வது பொதுத் தேர்தலில் 11,569 பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்ற மூசா, 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 2,184 பெரும்பான்மையுடன் சுங்கை சிபுகாவை வென்றார். அங்கு அவர் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் என்ற புரிதலை ஏற்படுத்திக் கொண்டார்.
சுங்கை சிபுகாவில் மூசாவின் ஆதரவில் அதிக விழுக்காடு வாக்குகள் சுங்கை மணிலாவுக்கு மாற்றப்பட்டுள்ளன.
ஜூலை 29-ஆம் தேதி மாநில அரசாங்கத்தை அமைக்க தோல்வியுற்ற பின்னர், மூசா கட்சிக்குள்ளேயே சவால்களை எதிர்கொள்கிறார்.
அண்மையில், 95 விழுக்காடு இட ஒதுக்கிடு பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கூறியிருந்தார்.