கோலாலம்பூர்: நேற்று அன்வார் இப்ராகிம் அறிவிப்புக்கு கருத்துரைத்த சாஹிட் ஹமிடியின் அறிக்கையானது அவரது சொந்த கருத்தாகும் என்று அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அம்னோ மற்றும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாரை ஆதரிப்பதை தம்மால் கட்டுப்படுத்த முடியாது என்று அவர் குறிப்பிடிருந்தார்.
இதற்கிடையில், பல தேசிய கூட்டணி மற்றும் பெர்சாத்து தலைவர்கள் தாங்கள் இன்னமும் மொகிதின் யாசின் தலைமைக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
அன்வார் இப்ராகிம் பிரதமராக பதவி ஏற்பாரா என்ற கேள்விக்கு, அது நடக்காத ஒன்று என்று அஸ்மின் கூறினார்.
நேற்று புதன்கிழமை பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்த பெரும்பான்மை ஆதரவில் அஸ்மின் அலி தரப்பு மற்றும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் இடம்பெறவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இதுவரையிலும், துன் மகாதீர் மற்றும் அவரது பெஜுவாங் கட்சி தனக்கு எந்தவொரு ஆதரவையும் வழங்கவில்லை என்று அவர் நேற்று தெரிவித்தார். ஆயினும், அவர் அவ்வாறு செய்வதற்கான சாத்தியக் கூறுகளையும் அன்வார் மறுக்கவில்லை.
நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில், அன்வார் தனக்கு வலுவான மற்றும் உறுதியான பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறினார். ஆனால், அவருக்கு ஆதரவாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியின் ஆதரவை முதலில் மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாத்துடினிடம் ஒப்படைப்பது மிகவும் பொருத்தமானது என்று அவர் கூறினார்.
“ஆதரவு வலுவானது மற்றும் உறுதியானது. நான்கு, ஐந்து அல்லது ஆறு அல்ல, ஆனால் அதிகமான பெரும்பான்மை” என்று அவர் கூறினார்.