கோலாலம்பூர்: நாட்டின் நிர்வாகத்தை கைப்பற்றும் முயற்சியில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் ஒத்துழைப்பு வழங்க கட்சி அவசரப்படாது என்று பெஜுவாங் தலைவர் முக்ரிஸ் மகாதீர் தெரிவித்தார்.
இது குறித்து அன்வார் தனது கட்சியை அழைக்கவில்லை என்று முன்னாள் பெர்சாத்து தலைவருமான முக்ரிஸ் கூறினார்.
“எனவே அவருடன் ஒத்துழைப்பு வழங்க நாங்கள் அவசரப்படவில்லை. அன்வாரின் நடவடிக்கையால் நான் ஆச்சரியப்படுகிறேன். அவருக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை போதுமானதாக இருப்பதாக அவர் கூறினார்
“பெஜுவாங், வாரிசான், உப்கோ மற்றும் முடா நிறுவனர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் ஆகியோரைக் கொண்ட எங்கள் பக்கம் குறைந்தது 18 பேர் உள்ளனர்.
“ஒருவேளை 18 எண் சிறியதாகக் கருதப்படலாம். டாக்டர் மகாதீர் முகமட்டின் தரப்பு அவருக்கு (அன்வார்) அளிக்கப்பட்ட ஆதரவில் சேர்க்கப்படவில்லை என்று அன்வாரே குறிப்பிட்டுள்ளார்” என்று அவர் இன்று தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 23 அன்று, நடந்த அவசர செய்தியாளர் கூட்டத்தில், அன்வார் அரசாங்கத்தை அமைப்பதற்கு தனக்கு வலுவான பெரும்பான்மை இருப்பதாகவும், பெறப்பட்ட பெரும்பான்மை பெரிய அளவிலானது என்றும் தெரிவித்திருந்தார்.
இதுவரையிலும், துன் மகாதீர் மற்றும் அவரது பெஜுவாங் கட்சி தனக்கு எந்தவொரு ஆதரவையும் வழங்கவில்லை என்று அவர் நேற்று தெரிவித்தார். ஆயினும், அவர் அவ்வாறு செய்வதற்கான சாத்தியக் கூறுகளையும் அன்வார் மறுக்கவில்லை.
இதனிடையே, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து போதுமான ஆதரவு இருப்பதாகக் கூறிய பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் அறிக்கையில் நம்பிக்கை இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்திருந்தார்.
2008- ஆம் ஆண்டில் அன்வார் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார், ஆனால் அது நிறைவேறவில்லை என்று மகாதீர் கூறினார்.
“இது நிரூபிக்கப்படாத உரிமைகோரல்களின் மற்றொரு அத்தியாயமா என்பதைப் பார்க்க நாம் காத்திருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில், அன்வார் தனக்கு வலுவான மற்றும் உறுதியான பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறினார். ஆனால், அவருக்கு ஆதரவாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியின் ஆதரவை முதலில் மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாத்துடினிடம் ஒப்படைப்பது மிகவும் பொருத்தமானது என்று அவர் கூறினார்.
“ஆதரவு வலுவானது மற்றும் உறுதியானது. நான்கு, ஐந்து அல்லது ஆறு அல்ல, ஆனால் அதிகமான பெரும்பான்மை” என்று அவர் கூறினார்.
தேசிய கூட்டணியின் தலைவர்கள் அன்வாரின் குற்றச்சாட்டுகளை மறுத்த நிலையில், அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தனது கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிகேஆர் தலைவருக்கு ஆதரவாக இருப்பதை உறுதிப்படுத்தினார்.
இதேபோன்ற வளர்ச்சியில், அமானா மற்றும் ஜசெக புதிய அரசாங்கத்தை அமைக்க அன்வாருக்கு போதுமான ஆதரவு இருந்தால், தங்கள் கட்சி அவரை ஆதரிக்கும் என்று தெரிவித்துள்ளன.