கோலாலம்பூர்: மஇகா தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடியின் கூற்றை மறுத்ததை அடுத்து, மசீச தலைவர் வீ கா சியோங்கும் அதனை மறுத்துள்ளார்.
நாடாளுமன்ற் அமர்வு உடனடியாக நடத்தப்பட மாமன்னரை பரிந்துரைக்க தேசிய முன்னணி கூட்டத்தில் பேசப்படவில்லை என்று அவர் கூறினார்.
“விக்னேஸ்வரன் கூறியது உண்மையே,”என்று வீ கா சியோங் கூறியுள்ளார்.
இதற்கிடையில், தேசிய முன்னணி உச்சமன்றக் குழு அம்னோ தலைவரின் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்காது என்று பிபிஆர்எஸ் தலைவர் ஆர்தர் ஜோசப் குருப் தெரிவித்தார்.
புதன்கிழமை நடைபெற்ற தேசிய முன்னணிக் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினின் உத்தரவு குறித்து எந்த அனுமானமும் செய்யக்கூடாது என முடிவெடுத்ததாக விக்னேஸ்வரன் முன்னதாக கூறியிருந்தார்.
“தேசிய முன்னணி தலைவரின் அறிக்கைக் கண்டு நான் அதிர்ச்சியடைகிறேன். நாடாளுமன்றத்தை உடனடியாக நடத்த உத்தரவிடுமாறு மாமன்னருக்கு முறையிடும் எந்தவொரு முடிவையும் தேசிய முன்னணி கூட்டம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
நேற்று, சாஹிட் ஹமிடி, மாமன்னருக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடரை உடனடியாக நடத்த உத்தரவிடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அம்னோ தலைவரின் அறிக்கை தவறானது என்று விக்னேஸ்வரன் கூறினார்.