Home நாடு ஹிண்ட்ராப் உடனான ஒப்பந்தத்தில் நஜிப் கையெழுத்திட்டார் – தேசிய முன்னணிக்கு ஆதரவு தருமாறு வேதமூர்த்தி வேண்டுகோள்

ஹிண்ட்ராப் உடனான ஒப்பந்தத்தில் நஜிப் கையெழுத்திட்டார் – தேசிய முன்னணிக்கு ஆதரவு தருமாறு வேதமூர்த்தி வேண்டுகோள்

875
0
SHARE
Ad

470x275xeff9169540ac7be5ad6b083b44dc90a9.jpg.pagespeed.ic.MBEfpTFDTn

கோலாலம்பூர், ஏப்ரல் 18 – ஹிண்ட்ராப் இயக்கம் இந்திய சமூகத்தின் நலனுக்காக உருவாக்கிய ஐந்தாண்டு திட்ட வரைவினை, தேசிய முன்னணி ஏற்றுக்கொண்டதாக, அக்கட்சியின் தலைவரான  நஜிப் இன்று மாலை அதற்கான ஒப்பந்ததத்தில் கையெழுத்திட்டார். இந்நிகழ்வு இன்று மாலை கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், விவேகானந்தா தமிழ்ப்பள்ளி அரங்கத்தில்  6.00 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி,

#TamilSchoolmychoice

“ஹிண்ட்ராப் தனது ஐந்தாண்டு திட்ட வரைவில் குறிப்பிட்டுள்ள 4 முக்கியப் பிரச்சனைகளான தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு, அடிப்படை வாழ்வாதாரங்கள் இல்லாதவர்களுக்கு உதவி, இந்திய மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்தவுடன் செய்துதருவதாக உறுதியளித்துள்ளது.

இனி ஹிண்ட்ராப், தேசிய முன்னணியுடன் புதிய பாதையில் பயணிக்கும். அதோடு இந்திய மக்களின் பிரச்சனைகளில் இன்னும் நிறைய கவனம் செலுத்தவேண்டியுள்ளது. ஆனால் அவர்களின் பொருளாதாரப் பிரச்சனைகளை தீர்ப்பது தான்  இப்போதைய முதல் கடமை.

மேலும் சிலர் ஹிண்ட்ராப் இயக்கத்தை நான் தேசிய முன்னணியிடம் விற்று விட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் பிரதமர் நஜிப் மீண்டும் தனது அரசாங்கத்தை அமைத்தவுடன் அதற்கான பதிலை தனது சேவைகளின் மூலம் நிரூபிப்பார்.

எனவே எதிர்வரும் பொதுத்தேர்தலில் இந்திய மக்கள் அனைவரும் தேசிய முன்னணிக்கு வாக்களித்து, அதை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வெற்றியடையச் செய்ய வேண்டும்” என்று வேதமூர்த்தி தெரிவித்தார்.

மேலும், கடந்த ஐந்தாண்டுகளாக இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்து பக்காத்தானிடம் தாங்கள் கெஞ்சி வந்ததாகவும், ஆனால் அதற்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பேசிய நஜிப், இந்திய சமுதாயத்தின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டதோடு, ஹிண்ட்ராப் உடனான இந்த ஒப்பந்தம் இந்திய மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பேருதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

ஹிண்ட்ராப்பின் ஐந்தாண்டு திட்ட வரைவில் உண்மையில் 6 பிரச்சனைகள் இடம்பெற்றிருந்தன அவற்றில் 4 மட்டுமே தற்போது தேசிய முன்னணி ஏற்றுக் கொண்டுள்ளது. அதில் இனப்பாகுபாடு மற்றும் காவல்துறை விசாரணையில் இந்தியர்கள் இறப்பு ஆகிய இரு பிரச்சனைகள் குறித்து அங்கே பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.