Home நாடு நிக் அப்டு 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாஸ் கட்சியிலிருந்து வெளியேறுகிறாரா?

நிக் அப்டு 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாஸ் கட்சியிலிருந்து வெளியேறுகிறாரா?

625
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அடுத்த 14 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி கெடு விதித்திருப்பதைத் தொடர்ந்து மலேசிய அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகியிருக்கிறது.

பெர்லிஸ் மாநிலத்தின் ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினரான ஷாஹிடான் காசிம் நாடாளுமன்றத்தைக் கூட்ட 28 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது – இந்நிலையில் 14 நாட்கள் மட்டுமே அவகாசம் தருவது என்ன நியாயம் என சாஹிட் ஹாமிடியைப் பார்த்துக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஆனால், முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தனது முகநூல் பக்கத்தில், 28 நாட்கள் கால அவகாசம் தேவையில்லை, தேவைக்கேற்ப அந்த 28 நாள் கால அவகாசத்தைக் குறைத்துக் கொண்டு முன்கூட்டியே நாடாளுமன்றத்தைக் கூட்டலாம் எனக் கூறியிருக்கிறார். சம்பந்தப்பட்ட சட்டவிதியையும் தனது முகநூல் பக்கத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் பாஸ் கட்சியின் பாச்சோக் (கிளந்தான்) நாடாளுமன்ற உறுப்பினரான நிக் அப்டு நிக் அசிஸ் பாஸ் கட்சியின் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு அந்தக் கட்சியிலிருந்து வெளியேறுவார் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நிக் அப்டு கிளந்தான் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாரும் பாஸ் கட்சியின் பிரபலத் தலைவராகத் திகழ்ந்தவருமான அமரர் நிக் அசிசின் மகனாவார்.

எனினும் இந்தத் தகவலை பாஸ் கட்சியின் உதவித் தலைவர் இட்ரிஸ் அகமட் மறுத்திருக்கிறார்.

அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கான ஆதரவைப் பெறுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சத்தியப் பிரமாணங்கள் சேகரிக்க முயற்சிகள் நடப்பதாக அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மலேசியா போஸ்ட் செய்தித் தளம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பேட்டியில் பேசிய மஸ்லான், சத்தியப் பிரமாணம் கையெழுத்திட எந்தவொரு நபரும் தன்னை அணுகவில்லை என்று கூறினார்.

“சத்தியப் பிரமாணம் பற்றி நான் கேள்விப்பட்டேன், நான் மறுக்கவில்லை. இதுபோன்ற முயற்சிகள் உண்மையில் மேற்கொள்ளப்படுகின்றன, இருப்பினும் தனிப்பட்ட முறையில் நானும் வேறு சில நண்பர்களும் எதையும் கையெழுத்திடவில்லை,” என்று அவர் கூறினார்.

அகமட் சாஹிட் ஹாமிடியின் கெடு குறித்து தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சாப்ரியும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அந்தப் பதினான்கு நாட்கள் கெடு என்பது அம்னோவின் அரசியல் குழு செய்திருக்கும் பரிந்துரை மட்டும்தான் என்றும் இறுதி முடிவல்ல என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கொள்கை ரீதியான இறுதி முடிவை அம்னோ உச்சமன்றம் மட்டுமே எடுக்க முடியும் என்றும் சாப்ரி மேலும் கூறினார். அவ்வாறு அடுத்த 14 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கூட்டாவிட்டால் அம்னோவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்தும் இன்னும் விவாதிக்கப்படவில்லை என்றும் சாப்ரி மேலும் தெரிவித்தார்.