Home நாடு துணையமைச்சர் சந்தாரா முயற்சியில் 3 ஆலயங்களை சட்டபூர்வமாக்கும் அங்கீகாரங்கள் வழங்கப்பட்டன

துணையமைச்சர் சந்தாரா முயற்சியில் 3 ஆலயங்களை சட்டபூர்வமாக்கும் அங்கீகாரங்கள் வழங்கப்பட்டன

596
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கூட்டரசுப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்து ஆலயங்களும், முஸ்லீம் அல்லாதாதர் வழிபாட்டுத் தலங்களும் சட்டபூர்வமான அங்கீகாரங்களைப் பெறும் முயற்சியில் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சந்தாரா குமார் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இதன் தொடர்பில் இன்று புதன்கிழமை (ஜூன் 23) பிற்பகலில் தலைநகர் மாநகர் மன்ற அலுவலகத்தில் மூன்று ஆலயங்களுக்கு அவை சட்டபூர்வமாக இயங்குவதற்கான அங்கீகாரக் கடிதங்களையும் சந்தாரா வழங்கினார்.

புக்கிட் ஜாலில் தோட்டத்தில் அமைந்திருக்கும் மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம், புக்கிட் ஜாலில் பகுதியில் இயங்கி வரும் ஓம் ஸ்ரீ சங்கிலி கருப்பன் ஆலயம், சிகாம்புட் பகுதியில் அமைந்திருக்கும் அம்மன்தெக் ஆலயம் ஆகியவையே அந்த 3 ஆலயங்களாகும்.

#TamilSchoolmychoice

“மக்கள் நல்லிணக்கத்தை முன்னிறுத்தி இஸ்லாம் அல்லாதோர் வழிபாட்டுத்தலங்கள் தொடர்பான சிக்கலுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது. பிரதமரும் இன, மத பேதமின்றி ஆலயங்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட ஆதரவளித்திருக்கிறார். மக்களின் நலம் பேணப்படுவதை எப்போதும் உறுதிப்படுத்தும் கடப்பாட்டில் தேசிய கூட்டணி அரசாங்கம் கொண்டிருக்கிறது. அரசாங்கம், இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு சட்டபூர்வ தளத்திற்கான அங்கீகாரக் கடிதத்தை வழங்கியுள்ளது” என்றும் சந்தாரா இன்று மேற்குறிப்பிட்ட ஆலயங்களின் பிரதிநிதிகளுக்கு அங்கீகாரக் கடிதம் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“இதனுடன் 16 ஆலயங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதில் ஏழு ஆலயங்களுக்கு மாற்றுத் தளங்களை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகவும் அங்கீகரிக்கப்படும். 6 ஆலயங்கள் தொடர்ந்து அதே இடத்தில் இயங்க அனுமதியும் அளிக்கப்பட்டிருக்கிறது. அவையும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அங்கீகரிக்கப்படும். ஒரு சீனர் வழிபாட்டுத் தலத்திற்கு தற்காலிக அரசாங்க அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு கோயில் அருகில் உள்ள தளத்திற்கு மாறிச் செல்ல கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறது. அத்துடன் ஒரு நிறுவனத்துக்கு சொந்தமான ஆலயத்தை அந்த நிறுவனத்துக்கான  நிலத்திலேயே செயல்பட கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறது” என்றும் சந்தாரா மேலும் தெரிவித்தார்.

கோலாலம்பூரில் அனுமதியின்றி இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத்தலங்கள் நிர்மாணிக்கப்பட்டது தொடர்பான சிக்கலுக்கு தீர்வு காண்பதில் கூட்டரசு பிரதேச அமைச்சு கொண்டிருக்கும் கடப்பாட்டை இது புலப்படுத்தியுள்ளது. இப்பிரச்சினைக்கு இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத்தலங்கள் தொடர்பான செயற்குழு கூட்டத்தில் தீர்வு காணப்பட்டது.

மலேசிய இந்து சங்கம், இந்து தர்ம மாமன்றம், மலேசிய பௌத்த சமயம், தவோ சமய அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டாக்டர் சந்தாரா அந்தக் கூட்டத்திற்கு தலைமை ஏற்றார்.

அண்மைய ஆய்வின்படி அரசாங்க நிலத்தில் 66 ஆலயங்களும், 43 சீன  வழிபாட்டு தலங்களும் நிர்மாணிக்கப்பட்டிருந்தது அடையாளம் காணப்பட்டது. எனினும் 2020 ஆகஸ்டில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் செயற்குழு அமைக்கப்பட்டது முதல் நடத்தப்பட்ட 6 தொடர் கூட்டங்களின் வாயிலாக 32 பிரச்சனைகள் ஆலோசிக்கப்பட்டன. அவற்றுள் 16-க்கு வெற்றிகரமாக தீர்வு காணப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் சந்தாரா குறிப்பிட்டார்.

அந்த இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத்தலங்கள் சட்டபூர்வமான தளத்துக்கான அங்கீகாரக் கடிதத்தை பெற்றிருப்பதோடு அவற்றுக்கான மாற்றுத் தளங்களையும் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

சட்டபூர்வமான தளத்துக்கான அங்கீகாரக் கடிதங்களைப் பெற்றுள்ள இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பட்டியலையும் சந்தாரா இன்று வெளியிட்டார்.

கூட்டரசு பிரதேச பகுதியில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத்தலங்கள் சட்ட முறைப்படி நிர்மாணிக்கப்படுவதை உறுதிப்படுத்த அரசாங்கம், அமைச்சு, மற்றும் அதன் கீழ் செயல்படும் துறைகள், நிறுவனங்கள் வாயிலாக தொடர்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சந்தாரா உறுதியளித்தார்.