Home இந்தியா ரஜினிகாந்த் “ரஜினி மக்கள் மன்றம்” இயக்கத்தைக் கலைத்தார்

ரஜினிகாந்த் “ரஜினி மக்கள் மன்றம்” இயக்கத்தைக் கலைத்தார்

1044
0
SHARE
Ad

சென்னை: அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனைகளை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் இன்று திங்கட்கிழமை (ஜூலை 12) தனது ரஜினி இரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சென்னையில் சந்தித்தார்.

அந்தச் சந்திப்பின் முடிவில் தான் அரசியலில் இருந்து முற்றாக விலகுவதாகவும் அதன் தொடர்பில் ரஜினி மக்கள் மன்றம் என்ற இயக்கத்தைக் கலைப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் அறிக்கை ஒன்றையும் இன்று ரஜினி வெளியிட்டார். அந்த அறிக்கையில், மக்கள் நலப் பணிகளுக்காக இயங்கி வந்த ரஜினிகாந்த் இரசிகர் மன்றம், அரசியல் பணிகளில் ஈடுபடுவதற்காக ரஜினி மக்கள் மன்றமாக உருமாற்றம் கண்டது என ரஜினி குறிப்பிட்டிருக்கிறார். இந்த இயக்கத்திற்கென பல பதவிகள் உருவாக்கப்பட்டன – பல அணிகளும் உருவாக்கப்பட்டன என்றும் ரஜினி குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

தான் இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்பதால் அந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தைக் கலைப்பதாகவும், இனி மக்கள் நலப்பணிகளுக்காக மட்டும் ரஜினி இரசிகர் மன்றம் தொடர்ந்து செயல்படும் என்றும் ரஜினிகாந்த் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.

முடிவுக்கு வந்த ரஜினியின் அரசியல்

கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினி புதிய கட்சி தொடங்கி அரசியலில் குதிப்பார், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார், ஆட்சியைப் பிடிப்பார் என்றெல்லாம் தினமும் ஊடகச் செய்திகள் வந்து கொண்டே இருந்தன.

ஆனால், அண்ணாத்தே படப்பிடிப்பின்போது அதில் கலந்து கொண்ட பலருக்கு கொவிட்-19 தொற்றுக் கண்டதைத் தொடர்ந்தும், தனது சொந்த உடல்நிலையைக் கருத்தில் கொண்டும் தாம் கட்சித் தொடங்கி அரசியலுக்கு வரமுடியாததை ரஜினிகாந்த் ஓர் அறிக்கையின் வாயிலாக கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில்  தெரிவித்தார்.

2020-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி கட்சித் தொடங்குவதை அறிவிப்பதாகவும், அதனைத் தொடர்ந்து நடைபெறும்  சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் ரஜினிகாந்த் அதற்கு முன்னர் கூறியிருந்தார்.

இன்று ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைப்பதாக ரஜினிகாந்த் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் அரசியல் பயணம் ஓர் இறுதியான முடிவுக்கு வந்திருக்கிறது.