Home நாடு இஸ்மாயில் தரப்பு தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 29 மட்டுமே!

இஸ்மாயில் தரப்பு தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 29 மட்டுமே!

586
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தங்களின் பக்கம் 31 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மொகிதின் யாசினுக்கு இருப்பதாக, துணைப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) அறிவித்திருந்தார். அந்தப் பட்டியலையும் வெளியிட்டார்.

ஆனால் அந்தப் பட்டியலில் இருந்த கீழ்க்காணும் மூவர் அம்னோ தலைவர் சைட் ஹாமிடியின் ஆதரவுப் பட்டியலிலும் இருந்தது தெரியவந்துள்ளது:

  • முகமட் நிசார் சக்காரியா (பாரிட்)
  • நோ ஓமார் (தஞ்சோங் காராங்)
  • அசிஸ் அப்துல் ரஹிம் (பாலிங்)

பின்னர் நோ ஓமார், அசிஸ் அப்துல் ரஹிம் இருவரும் தங்களின் நிலைப்பாட்டை விளக்கினர். தாங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவே வந்ததாகவும், தாங்கள் கையெழுத்திட்டது வருகைக்கான பதிவே தவிர, மொகிதினுக்கு ஆதரவு தருவதற்கான கையெழுத்து அதுவல்ல என்றும் அவர்கள் இருவரும் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து இஸ்மாயில் தரப்பு ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 29 மட்டுமே என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான முகமட் நிசார் சக்காரியா தான் எந்தப் பக்கம் என்பதை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இஸ்மாயில் சாப்ரியின் அறிவிப்பு

துணைப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் நேற்று  நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மொகிதினை ஆதரிக்கின்றனர் என அறிவித்தார்.

எதிர்வரும் செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மொகிதின் யாசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரையில் தாங்கள் தொடர்ந்து அவரை ஆதரித்துவரப் போவதாகவும் இஸ்மாயில் சாப்ரி தெரிவித்தார்.

அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் மஇகா தேசியத் துணைத் தலைவரும் மனிதவள அமைச்சருமான எம்.சரவணன், மசீச தலைவரும் போக்குவரத்து அமைச்சருமான வீ கா சியோங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அம்னோ உச்சமன்றம் பிரதமருக்கு ஆதரவு தருவதில்லை என முடிவெடுத்திருக்கும் நிலையில் அந்த முடிவுக்கு நீங்கள் கட்டுப்பட்டு கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறீர்களா இல்லையா என்ற முடிவைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளும் கடிதங்கள், அனைத்து அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 5) அனுப்பப்பட்டுள்ளன.

தங்களின் முடிவை இன்று சனிக்கிழமை, ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு அம்னோ காலக் கெடு நிர்ணயித்துள்ளது.

மொகிதினுக்கு ஆதரவு தெரிவிக்க இஸ்மாயில் சாப்ரியுடன் இணைந்தவர்களின் பட்டியலில் தாஜூடின் அப்துல் ரஹ்மான் (பாசிர் சாலாக்), நஸ்ரி அசிஸ் (பாடாங் ரெங்காஸ்), ஷாஹிடான் காசிம் (ஆராவ்), ஹாலிமா சாதிக் (கோத்தா திங்கி) ஆகிய அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.

இதைத் தொடர்ந்து அம்னோ இவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.