Home நாடு சரவணன் மீண்டும் மனித வள அமைச்சர்! மஇகாவுக்கு துணையமைச்சர் பதவி வழங்கப்படுமா?

சரவணன் மீண்டும் மனித வள அமைச்சர்! மஇகாவுக்கு துணையமைச்சர் பதவி வழங்கப்படுமா?

696
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : பிரதமராகப் பதவியேற்ற பின்னர் நாட்டு மக்களுக்கு தனது முதல் உரையை ஆற்றி விட்டு, தனது புதிய அமைச்சரவையை அமைப்பதில் மும்முரமாகியிருக்கிறார் இஸ்மாயில் சாப்ரி.

மொகிதின் யாசின் அமைச்சரவையில் சில அமைச்சர்கள் மீது குறைகூறல்கள் எழுந்திருந்தன.கட்சி சிபாரிசுகளின் மூலம் அவர்களே மீண்டும் அமைச்சரவையில் வந்து அமர்வார்களா? அல்லது இஸ்மாயில் சாப்ரி அவர்களை அதிரடியாக மாற்றுவாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

மஇகாவின் சார்பில் டத்தோஸ்ரீ சரவணன் மீண்டும் அமைச்சராவது உறுதியாகியிருக்கிறது. மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் சரவணனும் மொகிதின் அமைச்சரவையில் சிறப்பாகப் பணியாற்றிய அமைச்சர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

#TamilSchoolmychoice

தொழிலாளர் பிரச்சனைகளைத் திறமையாகக் கையாண்டது, அந்நியத் தொழிலாளர்களுக்கு உதவிய அதே வேளையில், சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கு எதிராகக் கடுமையாக நடவடிக்கை எடுப்பதிலும் மனித வள அமைச்சு சிறப்பாக செயல்பட்டது. எச்ஆர்டிஎப் எனப்படும் மனித வள திறன்களை வளர்க்கும் அமைப்பின் மூலம் பல்வேறு முயற்சிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு சரவணனுக்கு மீண்டும் மனித வள அமைச்சே ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஇகாவுக்கு கூடுதலாக துணையமைச்சர் பதவி கிடைக்குமா?

கடந்த மொகிதின் யாசின் அமைச்சரவையில் சரவணன் மட்டுமே அமைச்சராக இருந்தார். துணையமைச்சர்களாக மஇகாவில் இருந்து யாரும் வழக்கம்போல் நியமிக்கப்படவில்லை.

மஇகா சார்பில் துணையமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பதும் அதிலும் குறிப்பாக தமிழ்ப் பள்ளிகள், கல்வி என இந்திய சமூகம் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் அடங்கிய கல்வி அமைச்சில் துணையமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பதும் இந்திய சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

இப்போது தேசிய முன்னணி-அம்னோ இணைந்த ஆட்சி ஏற்பட்டுள்ளதால், மஇகா சார்பில் துணையமைச்சர்கள் கூடுதலாக நியமிக்கப்படுவார்களாக என்ற எதிர்பார்ப்பும் கட்சியினரிடையே எழுந்துள்ளது.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இல்லாததால், மஇகா சார்பிலான செனட்டர்கள் மூலமே துணையமைச்சர்கள் நியமிக்கப்பட முடியும்.

தற்போது மஇகா சார்பிலான செனட்டர்களாக மஇகா உதவித் தலைவர் டத்தோ டி.மோகன், டத்தோஸ்ரீ வேள்பாரி சாமிவேலு ஆகிய இருவரும் நாடாளுமன்ற மேலவையில் இடம் பெற்றிருக்கின்றனர்.