அக்டோபர் 4-ஆம் தேதி, மஇகாவின் 6-வது தேசியத் தலைவர் டான்ஶ்ரீ வெ.மாணிக்கவாசகம் அவர்களின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய பத்திரிகை அறிக்கை
மஇகாவின் 6-வது தேசியத் தலைவராக நமது கட்சிக்கும், இந்திய சமுதாயத்திற்கு அளப்பரிய சேவைகளை வழங்கி மறைந்த அமரர் டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரின் பணிகளை நினைவு கூர்வதை கௌரவமாகவும், பெருமையாகவும் கருதுகிறேன்.
மேலும் எனது தந்தையார் சன்னாசி அவர்கள் கிள்ளான் வட்டார மஇகா கிளைத் தலைவராக, டான்ஶ்ரீ மாணிக்காவுடன் நெருக்கமாக அரசியல் பணியாற்றியவர் என்பதையும், அதன் காரணமாக டான்ஶ்ரீ மாணிக்கா குறித்து பல நல்ல கருத்துகளை என்னிடம் தெரிவித்திருக்கிறார் என்பதையும் இந்த வேளையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
நீண்ட கால அரசியல் பாரம்பரியத்தைக் கொண்ட டான்ஶ்ரீ மாணிக்கா மஇகா தேசியத் தலைவராக 6 ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருந்தார். ஆனால், அந்த 6 ஆண்டுகளில் அவர் திட்டமிட்டுச் செயல்படுத்திய திட்டங்கள் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
அவர் அன்று வகுத்துத் தந்த நிருவாக அடிப்படையில்தான் கட்சியிலும் – கட்சியின் தலைமை அலுவலகத்திலும்–பல செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. உதாரணமாக, அவரின் பதவிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கிளைகளுக்கான “பி” பாரம் நடைமுறைகள்தான் இன்றுவரை ஆண்டுதோறும் பின்பற்றப்படுகின்றன.
இன்றைக்கு நமக்கு பெரும் சொத்தாகவும், நமது தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் இல்லமாகவும் திகழும் மஇகா தலைமையகக் கட்டடம் டான்ஶ்ரீ மாணிக்காவின் கடுமையான உழைப்பையும் கட்சிக்கான பங்களிப்பையும் எடுத்துக் காட்டும் அடையாளச் சின்னமாகும்.
தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் உருவாக்கத்திலும் பணியாற்றிய டான்ஶ்ரீ மாணிக்கா, அந்தக் கூட்டுறவுக் கழகத்தின் துணைத் தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார்.
பின்னர் மஇகா தேசியத் தலைவராக, நேசா, மஇகா யூனிட் டிரஸ்ட்ஸ் போன்ற செயல்திட்டங்களை உருவாக்கினார். எதிர்கால இந்தியர்களின் வளர்ச்சிக்காக அப்போதே இந்தியர் புளூபிரிண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தோட்டத் தொழிலாளர் வீட்டுடமைத் திட்டத்திற்காகப் பாடுபட்டார்.
அத்தகைய மாமனிதரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, இன்று கட்சிக்குத் தலைமையேற்று நடத்திவரும் நான், என்னால் இயன்ற அளவுக்கு டான்ஶ்ரீ மாணிக்கா போன்றவர்கள் விட்டுச் சென்ற நற்பணிகளைத் தொடரவும், கட்சியை மேலும் முன்னெடுத்து இந்திய சமூகத்திற்கு உதவும் வகையில் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லவும் பாடுபடுவேன் என்ற உறுதிமொழியை வழங்க விரும்புகிறேன்.
மஇகா என்பது எந்த ஒரு தனிமனிதருக்கும் உரிமையானதல்ல. மக்களுக்காக, மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக தொடங்கப்பட்ட இந்த அரசியல் இயக்கம், டான்ஶ்ரீ மாணிக்கா போன்ற பல தலைவர்களின் அர்ப்பண உணர்வாலும், தியாகத்தாலும் கட்டி எழுப்பப்பட்டதாகும்.
அந்த உணர்வோடு டான்ஶ்ரீ மாணிக்கா போன்ற கடந்த காலத் தலைவர்களை நன்றியோடு நினைவுகூர்ந்து, நமது அரசியல் பயணத்தைத் தொடர்வோம்.