Home உலகம் உக்ரேன்– ரஷ்யா மோதல்கள்: வரலாற்றுப் பின்னணி (பகுதி 3) – கிரிமியா விவகாரம்

உக்ரேன்– ரஷ்யா மோதல்கள்: வரலாற்றுப் பின்னணி (பகுதி 3) – கிரிமியா விவகாரம்

846
0
SHARE
Ad

(உக்ரேன்– ரஷ்யா இடையிலான போர் கடந்த வியாழக்கிழமை பிப்ரவரி 24-ஆம் தேதியன்று ரஷியப் படைகளின் தாக்குதலோடு தொடங்கி விட்டது. இந்த இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்சனைகள் என்ன? வரலாற்றுப் பின்னணிகள் என்ன? தனது பார்வையில் விவரிக்கிறார் இரா.முத்தரசன். இந்தக் கட்டுரையின் முதல் பகுதி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 27) அன்றும் 2-வது பகுதி திங்கட்கிழமை (பிப்ரவரி 28) அன்றும் செல்லியலில் இடம் பெற்றன)

கிரிமியா என்பது உக்ரேன் நாட்டின் தென்முனையில் நிலப்பகுதியின் வழியாக ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு தீபகற்பம்.

உதாரணமாக நமது மலேசியாவின் தென்முனையில் இருக்கும் சிங்கப்பூர், ஜோகூர் நிலப்பகுதியுடன் இணைந்து ஒட்டிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அதுதான் கிரிமியா!

#TamilSchoolmychoice

கிரிமியாவை அடுத்து உள்ள கடல் பகுதிதான் ரஷியாவையும் கிரிமியாவையும் பிரிக்கின்றது.

உக்ரேன்-ரஷியா இடையிலான மோதல்களுக்குப் பின்னணியில் முக்கிய அங்கம் வகிப்பது கிரிமியா. இங்கு அமைந்துள்ள மருத்துவப் பல்கலைக் கழகங்களில் நமது மலேசிய மாணவர்கள் பலர் படித்திருக்கின்றனர். இன்னும் படித்து வருகின்றனர்.

2014-ஆம் ஆண்டில் ரஷியா. உக்ரேனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியா தீபகற்பத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து தன் ஆதிக்கத்தில் கொண்டு வந்தது.

இன்றுவரை ரஷியா-உக்ரேன் இருநாடுகளுக்கும் இடையில் தொடரும் பல பிரச்சனைகளுக்கான மூலகாரணம் கிரிமியாவில் இருந்துதான் தொடங்குகிறது.

கிரிமியா எப்படி, ஏன் ரஷியாவால் கைப்பற்றப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

ரஷியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிரிமியா

கடந்த கால ரஷிய ஆதிக்கத்தின் பிரதிபலனாக கிரிமியா நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ரஷியர்களாகவும், அவர்களின் மொழி ரஷிய மொழியாகவும் இருந்து வந்தது. ஆனால், கிரிமியா, உக்ரேன் நாட்டின் ஒரு பகுதி. உக்ரேன் மக்களும் இதனை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல் வாழ்ந்து வந்தனர்.

உக்ரேன் நாட்டில் 2014-இல் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள், ரஷிய அதிபர் புடினை விழித்துக் கொள்ளச் செய்தன. உக்ரேன் ரஷியாவுடன் நெருக்கம் பாராட்டாமல், ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி பொருளாதார, அரசியல் ரீதியாக நகர்வதைக் கொண்டு விளாடிமிர் புடின் ஆத்திரம் கொண்டார்.

ரஷிய ஆதரவு அதிபரான யானுகோவிச் உக்ரேனில் இருந்து வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்ததும், மிகவும் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்த புடின் உக்ரேன் மீது ஏதாவது ஒரு வகையில் பழி தீர்த்துக் கொள்ள நினைத்த போது அவரது கண்ணின் பட்டதுதான் கிரிமியா.

ரஷியாவுக்கு அடுத்துள்ள பிரதேசம் கிரிமியா. 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட ரஷிய மக்கள் இங்கு வசிக்கிறார்கள். பெரும்பான்மையான கிரிமிய மக்கள் தங்களை ரஷிய வம்சாவளியினராகவே கருதினர். ரஷியாவுடன் இணைந்திருக்கவே விரும்பினர் என்பதுதான் உண்மை.

இது போன்ற சாதக அம்சங்களைக் கருத்தில் கொண்டு அதிரடியாகக் களத்தில் இறங்கினார் புடின். கிரிமியா மக்களுக்காக பொது வாக்கெடுப்பு ஒன்றை உடனடியாக கிரிமியா நாடாளுமன்றம் குறுகிய கால அவகாசத்தில் அறிவித்தது.

பொது வாக்கெடுப்புக்கு ஒரு நாள் முன்னதாக, உக்ரேன் நாட்டிலிருந்து பிரிவதற்கு ஒப்புதல் அளிப்பதாக கிரிமியா நாடாளுமன்றம் வாக்களித்தது.

பொது வாக்கெடுப்புக்கான அறிவிப்பை வெளியிட்டதும், புடின் ரஷியத் துருப்புகளை கிரிமியாவுக்குள் வலுக்கட்டாயமாக நுழைத்தார். கிரிமியாவின் முக்கிய மையங்களில் ரஷியத் துருப்புக்கள் ஆயுதங்களுடன் காணப்பட்டதை அனைத்துல தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.

இந்த அச்சுறுத்தல், நெருக்குதல் எல்லாம் மக்களை பயமுறுத்தி அவர்கள் கிரிமியா ரஷியாவுடன் இணைவதற்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என அனைத்துலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன என்றாலும், புடின் மசிவதாக இல்லை. அடுத்தடுத்து அதிரடியாக காய்களை நகர்த்தத் தொடங்கினார்.

இதனையெல்லாம் சற்றும் எதிர்பார்க்காத அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் உண்மையில் புடினின் அரசியல் சாதுரியத்தால் ஏமாந்து விட்டனர் என்றுதான் கூற வேண்டும்.

என்ன செய்வது என்பது தெரியாமல் மேற்கத்திய நாடுகளும், உக்ரேனும் விழித்துக் கொண்டிருக்க, கடந்த 2014 மார்ச் 16ஆம் தேதி கிரிமியாவில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு 97 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் ரஷியாவுடன் இணைவதற்கு ஆதரவு தெரிவித்தனர் என்று அறிவிக்கப்பட்டது.

1954ஆம் ஆண்டு முதல் உக்ரேனுடன் ஒரு பகுதியாக விளங்கி வந்த கிரிமியா ரஷியாவுடன் இணைவது மக்களால் செய்யப்பட்ட முடிவுதான் என்பதுதான் இதில் உள்ள ஒரே பிரச்சனை.

கிரிமியா ரஷியாவில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டது சரியா?

உக்ரேனின் சட்டப்படி, ஒரு பிரதேசம் பிரிவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம். ஆனால் அத்தகைய வாக்கெடுப்பு ஒட்டு மொத்த நாட்டு மக்களிடையேயும் நடத்தப்பட வேண்டும். மொத்த நாடும் ஒரு பிரதேசம் பிரிவதற்கு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ வாக்களிக்க வேண்டும்.

ஆனால், இங்கு நடந்தது என்னவென்றால், கிரிமியா பிரதேசத்தின் மக்கள் மட்டும்தான் பொது வாக்கெடுப்பில் கலந்து கொண்டார்கள்.

பொது வாக்கெடுப்புக்கு முன்னதாக ரஷியா நடத்திய அத்துமீறல்கள், இராணுவத் துருப்புகளின் குவிப்பு, மக்களுக்கு விடுக்கப்பட்ட மறைமுக மிரட்டல்கள் – போன்ற அம்சங்கள்தான் அனைத்துலக சமுதாயத்திற்கு நெருடல்களாக இருந்தன. இது சுதந்திரமான பொது வாக்கெடுப்புதானா என்ற சந்தேகத்தையும் கிளப்பின.

ஆனால், பொதுவாக்கெடுப்பு முடிந்த உடனேயே கிரிமியா ரஷியாவுடன் இணைய விண்ணப்பிக்க, ரஷிய நாடாளுமன்றமும் உடனடியாக அதனை ஏற்றுக் கொண்டது. கண்மூடிக் கண் திறப்பதற்குள் கிரிமியா ரஷியா நாட்டின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

கிரிமியாவில் இருந்த உக்ரேனின் இராணுவத் தளங்கள் ரஷியத் துருப்புகளால் கைப்பற்றப்பட்டன. உக்ரேனின் இராணுவத்தினர் கிரிமியாவிலிருந்து வெளியேறி விட்டாலும், பலர் ரஷியத் துருப்புகளால் சிறை பிடிக்கப்பட்டனர் எனத் தகவல்கள் கூறுகின்றன.

நிலைமையைச் சமாளிக்கவும், சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடத்தவும் ஐக்கிய நாட்டு சபை (ஐ.நா) அதிகாரிகளும், அப்போதைய ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கீ மூனும் மாஸ்கோவுக்கும், உக்ரேனுக்கும் விரைந்தனர். ஆனால், கிரிமியா ரஷியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட முடிவு என்பது மட்டும் முடிவடைந்த கதையாகிவிட்டது.

கிரிமியாவை ரஷியாவுடன் இணைப்பதற்கான பொதுவாக்கெடுப்பு செல்லாது என ஐ.நா தீர்மானம் போட்டது. பயனில்லாத இதுபோன்ற எத்தனையோ தீர்மானங்களின் பட்டியலில் இந்தத் தீர்மானமும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் கிரிமியா குறித்து ஐநா பாதுகாப்பு மன்றத்தில் கொண்டு வரப்பட்ட விவகாரங்கள் ரஷியாவின் வீட்டோ (Veto) அதிகாரத்தால் முறியடிக்கப்பட்டன.

அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கிரிமிய இணைப்பைத் தாங்கள் அங்கீகரிக்கவில்லை என்று அறிவித்தன.

இருந்தாலும் 8 ஆண்டுகள் கடந்து விட்டன. இணைக்கப்பட்ட கிரிமியா இணைக்கப்பட்டதுதான்.

கிரிமியா விவகாரத்தின் மிக முக்கிய அம்சம், ரஷியாவுடன் இணைப்பு என்பது பொது வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது என்பதுதான்.

கிரிமிய நாட்டு மக்களில் பெரும்பான்மையோர் ரஷியர்கள் என்பதும் உண்மையிலேயே அவர்கள் மொழியாலும், கலாச்சாரத்தாலும், பூகோள ரீதியாகவும் ரஷியாவுடன் இணைந்திருப்பதையே விரும்புகின்றார்கள்.

முடிந்து போன – அனைவராலும் மறக்கப்பட்டுவிட்ட – கிரிமியா விவகாரத்தைத் தொடர்ந்து – உக்ரேன் – ரஷியா இடையிலான மோதல்களும் பிரச்சனைகளும் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

பெரும்போராக உருவெடுத்திருக்கின்றன.

-இரா.முத்தரசன்

அடுத்து :

உக்ரேன்-ரஷியா மோதல்களின் வரலாற்றுப் பின்னணி – அடுத்தது என்ன? (பகுதி 4 – நிறைவு)

  •  கிழக்கு உக்ரேனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க் பகுதிகளில் கிளர்ச்சியாளர்களை உருவாக்கிய ரஷியா
  • லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க் பகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு உக்ரேனை ஆக்கிரமித்த ரஷிய அதிபர் புடின்.
  • எதிர்காலப் பாதிப்பு உக்ரேனுக்கா? ரஷியாவுக்கா?