Home நாடு நெங்கிரி : காலை 10.00 மணிவரை 25.66 % வாக்குப் பதிவு!

நெங்கிரி : காலை 10.00 மணிவரை 25.66 % வாக்குப் பதிவு!

490
0
SHARE
Ad
பிரச்சாரத்தில் அம்னோ-தேசிய முன்னணி வேட்பாளர் அஸ்மாவி

குவா மூசாங் : நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 17-ஆம் தேதி) காலை 8.00 மணிக்குத் தொடங்கிய நிலையில், காலை 10.00 மணி வரையில் 25.66 விழுக்காட்டு வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

நெங்கிரி தொகுதி அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இங்கு வெல்வதன் மூலம் கிளந்தான் மாநிலத்திலும் தங்களுக்கு இன்னும் செல்வாக்குண்டு என்பதை அம்னோ நிரூபிக்குமா என்பதுதான் கவன ஈர்ப்புக்கான காரணம்!

தேசிய முன்னணிக்கும் பெரிக்காத்தான் நேஷனலுக்கும் இடையில் நேரடிப் போட்டி இங்கு உருவெடுத்துள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி நெங்கிரி சட்டமன்றத்திற்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது.

கடந்த 2023 சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் சார்பில் போட்டியிட்ட பெர்சாத்து வேட்பாளர் முகமட் அசிசி அபு நைம் 810 வாக்குகளில்தான் இங்கு வெற்றி பெற்றார். அண்மையில் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் பெர்சாத்து கட்சியில் இருந்து ஜூன் 13-ஆம்  தேதி நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரின் சட்டமன்றத் தொகுதியும் காலியானதாக கிளந்தான் சட்டமன்ற அவைத் தலைவர் டத்தோ முகமட் அமார் நிக் அப்துல்லா கடந்த ஜூன் 19-ஆம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

பெர்சாத்து கட்சியின் சார்பில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக முகமட் ரிஸ்வாடி இஸ்மாயில் போட்டியிடுகிறார். இவர் குவா மூசாங் தொகுதி பாஸ் கட்சியின் முன்னாள் இளைஞர் பகுதித் துணைத் தலைவராவார். அரச மலேசிய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த இடைத் தேர்தலில் அவர் பாஸ் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இங்கு போட்டியிடும் அம்னோ-தேசிய முன்னணி வேட்பாளர் முகமட் அஸ்மாவி ஃபிக்ரி அப்துல் கானி ஆவார்.

கடந்த 2023 சட்டமன்றத் தேர்தலில் முகமட் அசிசி பெர்சாத்து கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேசிய முன்னணியின் அப்துல் அசிஸ் யூசோப்பைத் தோற்கடித்தார். இதற்கிடையில் நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலை சட்டரீதியாக நிறுத்தும் நீதிமன்ற வழக்குகளில் முகமட் அசிசி தோல்வியடைந்தார்.

2004 தொடங்கி இதுவரை நெங்கிரியில் நடைபெற்ற 5 தேர்தல்களில் 4 தேர்தல்களில் தேசிய முன்னணி வெற்றி பெற்றது. 2023-இல் மட்டுமே பாஸ்-பெர்சாத்து வேட்பாளர் முகமட் அசிசி வெற்றி பெற்றார்.