Home நாடு பிகேஆர்: மூன்றில் இரண்டு பிரிவு தொகுதிகள் நூருலை ஆதரிக்கின்றன – ரமணன் கூறுகிறார்!

பிகேஆர்: மூன்றில் இரண்டு பிரிவு தொகுதிகள் நூருலை ஆதரிக்கின்றன – ரமணன் கூறுகிறார்!

46
0
SHARE
Ad
டத்தோஸ்ரீ ஆர்.ரமணன்

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் 222 பிரிவுகளில் மூன்றில் இரண்டு பங்கினர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இசாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவுத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

“எனக்கு இது அடித்தள உறுப்பினர்களின் விருப்பத்தை எடுத்துக் காட்டுகிறது. நான் பார்த்தவற்றின் அடிப்படையில், 150க்கும் மேற்பட்ட பிரிவுகள், அல்லது மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகள் நூருலை துணைத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்துள்ளன” என்று அவர் கூறினார்.

சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும், துணையமைச்சருமான, ரமணன் “நூருல் இசா அனைத்துலக அளவில் செல்வாக்கு பெற்றவராகவும், நன்னெறிகளையும். மிக உயர்ந்த நேர்மையும் கொண்டவராக கருதப்படுவதால், அவரின் தேர்வு கட்சிக்கு பயனளிக்கும்” எனத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“இந்தப் பதவிக்கு அவர் நிச்சயமாக தகுதி பெற்றவர். அவருக்கு பரந்த அரசியல் அனுபவம் உண்டு என்பதோடு, மலேசியாவில் பொதுமக்களிடையே அறிமுகத்தையும் வலிமையான ஆதரவையும் கொண்டவர். உலகளவில் அங்கீகரிக்கப்பட்டவர்.  எனவே என் பார்வையில், அவர் உண்மையில் துணைத் தலைவர் பதவிக்குத் தகுதியானவர். நான் நூருல் இசாவை வெளிப்படைத் தன்மை வாய்ந்தவராகவும், தொலைநோக்குப் பார்வையும் தெளிவான இலக்குகளைக் கொண்டவராகவும்  பார்க்கிறேன். அவர் ஒருபோதும் தனது போராட்டத்தில் இருந்து இடைவேளை எடுக்கவில்லை அல்லது சேவை செய்ய விரும்பவில்லை என்று கூறியதில்லை” என்றும் ரமணன் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை (மே 8) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது ரமணன் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

பிரதமரும் பிகேஆர் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மகள் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது வாரிசு அரசியல் என்றுகூறும் சில தரப்பினரின் கூற்றுகளை ரமணன் நிராகரித்தார். தர்க்கரீதியாக, இது ஒரு ஜனநாயக போட்டி என்றும், அன்வார் தன் மகளுக்கு செய்யும் நியமனம் அல்ல என்றும் அவர் வாதிட்டார்.

“நூருல் இசா தனது தந்தையால் நியமிக்கப்பட்டிருந்தால், ஆம், அது உறவுமுறை ஆதரவு என்றும் வாரிசு அரசியல் என்றும் கூறலாம். ஆனால் இது துணைத் தலைவருக்கான கட்சித் தேர்தல்; அவர் போட்டியிடுகிறார், நியமிக்கப்படவில்லை. எங்களுக்கு, பிகேஆர் கட்சிக்கு, 30,000 உறுப்பினர்கள், மூன்று இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார் துணைத் தலைவர், உதவித் தலைவர்கள், யார் மத்திய உச்சமன்ற செயலவையினர் உறுப்பினர்கள் ஆவார்கள் என்பதை முடிவு செய்கிறார்கள். எனவே அவர் வென்றால், அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவால்  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றுதான் பொருள்படுமே தவிர – வாரிசு அரசியலால் அவர் வெற்றி பெற்றார் என்ற பிரச்சனை எழவில்லை,” என்றும் ரமணன் கூறினார்.

இதற்கிடையில் கட்சியின் 4 உதவித் தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட ரமணன் போட்டியில் குதித்திருக்கிறார்.

பிகேஆர் தேசிய மாநாடு மே 21 முதல் 24 வரை ஜோகூர் பாருவில் நடைபெறும்.