Home நாடு வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய படங்கள்: “ஆல்விவிக்கு கட்டாயம் தண்டனை வழங்க வேண்டும்” – கைரி

வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய படங்கள்: “ஆல்விவிக்கு கட்டாயம் தண்டனை வழங்க வேண்டும்” – கைரி

500
0
SHARE
Ad

khairyjamaluddin540pxகோலாலம்பூர், ஜூலை 16 – இஸ்லாம் மதத்தினரை இழிவுபடுத்தும் படியான புகைப்படங்களை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த விவகாரத்தில், ஆல்வின் டான் மற்றும் விவியான் லீ ஆகியோர் தங்கள் செயலுக்காக முகநூலில் மன்னிப்பு கோரினால் மட்டும் போதாது, சட்டப்படியான நடவடிக்கைகளை எதிர்நோக்க வேண்டும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கைரி மேலும் கூறுகையில், “அவர்கள் இருவரும் யூ டியூப் (Youtube) வலைத்தளத்திலும் மன்னிப்பு கேட்பது போல் உள்ள காணொளியை பதிவேற்றம் செய்துள்ளனர். ஆனால் அது மட்டும் போதாது. அவர்களுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். அவர்கள் மன்னிப்பு கேட்டுவிட்டதால், தகுந்த தண்டனை ஏதும் வழங்காமல் இருந்தால், அது பாரபட்சமானது” என்று தெரிவித்தார்.

மேலும், “இந்த விவகாரம் மிகவும் கடுமையான ஒன்று. இதனால் இஸ்லாம் மதத்தினர் மிகவும் கோபத்துடன் உள்ளனர்” என்று கைரி கூறினார்.

#TamilSchoolmychoice

‘ஆல்விவி’ என்ற பெயரில் உள்ள தங்களது வலைத்தளத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய படங்களை பதிவேற்றம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் இந்த ஜோடி, கடந்த வாரம் வியாழக்கிழமை, “பக்குத்தேவுடன் நோன்பு திறக்க வாருங்கள். நல்ல வாசனையுடன் ஹலால் முத்திரை கொண்ட சுவையான உணவு” என்று கூறினர்.

அதுமட்டுமின்றி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பன்றி இறைச்சியுடன் ‘ஹலால்’ முத்திரை வைத்த படங்களைத் தங்கள் முகநூலில் பதிவேற்றம் செய்து மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் நேற்று காலை 10.45  மணியளவில் மலேசிய தகவல்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணைய அலுவலகத்திற்கு ( Malaysia Communications and Multimedia Commission) விசாரணைக்காக வந்தனர்.

விசாரணை முடிந்து சென்ற அவர்கள் யூ டியூப்  (Youtube) மற்றும் முகநூல் (Facebook) போன்ற சமூக வலைத்தளங்களில் தங்கள் செயல் குறித்து மன்னிப்பு கோரினர் என்பது குறிப்பிடத்தக்கது.