டல்லஸ், ஆக. 7- அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் டபிள்யு புஷ், அமெரிக்காவின் அதிபராக 2001ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை இருந்துள்ளார்.
அதற்கு முன், அவர் டெக்சாஸ் மாகாணத்தின் கவர்னராக பணியாற்றி உள்ளார். அதிபர் பதவியில் இருந்து விலகிய பின்னர், அவர் பொது வாழ்வில் இருந்தும் ஒதுங்கினார். தற்போது டல்லஸ் நகரில் அவர் தனது மனைவியுடன் வசித்து வருகின்றார்.
இந்நிலையில், 67 வயதான புஷ், நேற்று முந்தைய நாள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்குச் சென்றார். அப்போது அவரது இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய் ஒன்றில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து அவர் உடடினயாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு நேற்று இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.
ரத்தத்தில் உள்ள அடைப்பை நீக்கும்வண்ணம், சிறிய கருவி ஒன்று (ஸ்டன்ட்) அவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. அவர் நலமுடன் இருப்பதாகவும், இன்று வீடு திரும்புவதாகவும் அவரது தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார். அவரது வழக்கமான பணிகளில் வியாழன் முதல் ஈடுபடுவார் என்றும் அவர் மேலும் கூறினார்.
புஷ், அமெரிக்காவின் அதிபராகப் பணியில் இருந்த காலமே அமெரிக்க அரசியலில் மிகவும் மோசமான காலகட்டம் என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். ஆனால், தற்போது அவருக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.