கோலாலம்பூர்,பிப்.12- தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு தரப்பினர் நம்பிக்கை கொள்ளததால் 13ஆவது பொதுத்தேர்தலில் எதிர்பாராத சம்பவங்கள் நிகழலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் துணைத்தலைவர் டத்தோ வான் அகமட் வான் ஒமார் கூறுகையில், கடந்த 3 ½ ஆண்டுகளில் 31 லட்சம் பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்துக் கொண்டுள்ளனர்.
ஒரு வேளை வரும் மார்ச் மாதத்திற்கு பின்னர் பொதுத் தேர்தல் நடைபெற்றால், ஒரு லட்சத்து 64 ஆயிரம் பேர் கூடுதலாக வாக்களிப்பார்கள். அவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு நான்காவது காலாண்டில் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொண்டவர்கள் என்றும் அவர் சொன்னார்.
எத்தரப்பினர் எந்த மாதிரியான செயலில் ஈடுபட்டாலும், தேர்தல் ஆணையத்தின் விதி முறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் சீரமைப்பு நாடாளுமன்றத் தேர்வுக்குழு முன்வைத்த பல்வேறு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் சிறந்த பாணியில் செயலாற்றி வருவதாகவும், ஆணையத்தின் துணைத்தலைவர் டத்தோ வான் அகமட் வான் கூறினார்.
வாக்களிக்கும் மையத்திலுள்ள வேட்பாளர்களின் பிரதிநிதிகள் வாக்குப் பெட்டிகள் உட்பட அஞ்சல் வாக்குகளைக் கொண்டு செல்லும்போது பாதுகாப்பாக உடன் வந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார்.
தற்போதுள்ள அரசியல் நெருக்கடியில் வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளிலும் கடுமையான போட்டி நிகழலாம் என்றார். இப்பொதுத் தேர்தலில் யாரும் போட்டியின்றி வெற்றி பெற மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.