வாஷிங்டன், டிசம்பர் 10– செவ்வாய்கிரகத்தில் ஏரி இருந்ததற்கான ஆதாரத்தை கியூரியா சிட்டி விண்கலம் கண்டுபிடித்தது.
செவ்வாய் கிரத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் கியூரியா சிட்டி என்ற ஆய்வக விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது.
தற்போது செவ்வாய் கிரகத்தின் மண், பாறை, காற்று மற்றும் சுற்றுப்புற சூழலை புகைப்படம் எடுத்தும் மாதிரிகளை சேகரித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
செவ்வாய் கிரகத்தின் வறண்ட மேற்பரப்பை கியூரியாசிட்டி ஆய்வு செய்தது. தற்போது அதில் தண்ணீர் எதுவுமின்றி வறண்டு கிடக்கிறது. ஆனால் அங்கு மிகப்பெரிய தண்ணீர் ஏரி இருந்தது தெரிய வந்துள்ளது.
மேலும் அங்கு இருக்கும் பாறைகளில் துளையிட்டு வெளியான துகள் மாதிரிகள் ஆய்வு மேற்கொள்ளபட்டது. அதில் கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், சல்பர் போன்ற கனிமங்கள் உள்ளன.
இவை நுண்ணுயிரிகள் வாழ்வாதாரத்துக்கு தேவைப்படுபவை ஆகும். மேற்கண்ட கனிம வளங்கள் இப்பாறையில் இருப்பதால் இங்கு ஏரி இருந்திருக்க வேண்டும். அவற்றில் நுண்ணுயிரிகள் வாழ்ந்திருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
செவ்வாய் கிரக பாறைகளில் இதுபோன்ற கனிம வளங்கள் இருப்பது தற்போதுதான் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மண் இயற்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் துளையிடும்போது மணல் மற்றும் களிமண் பாறைகள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் அங்கு ஏரிகளும், ஆறுகளும் கடந்த 360 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.