கோலாலம்பூர், டிச 19 – மசீச தேர்தலில் தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்கள் முன்னிலையில் பொது விவாதம் நடத்த வேண்டியது கட்டாயம் தான் என்று வேட்பாளர்களில் ஒருவரான டத்தோஸ்ரீ ஆங் டீ கியாட் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எனினும், நேரமின்மை காரணமாக தான் அந்த விவாதத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
“விவாதம் குறித்து நான் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் அந்த நேரத்தில் எனக்கு வேறு ஒரு முக்கிய பணி இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளேன். நான் நடப்பு தலைவர் கிடையாது. அதனால் நான் வாக்குகளை பெற கடுமையாக உழைக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடத்தையும் கணக்கு வைக்க வேண்டும் ” என்று ஆங் நேற்று தெரிவித்தார்.
இந்த விவாதம் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன மண்டபத்தில் நடப்பதற்கான ஏற்பாடுகளை கட்சி செய்திருந்தது. ஆனால் இந்த விவாதத்திற்கு உதவித் தலைவரான கான் பின் சியூ மட்டுமே கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்ததால், ஒருங்கிணைப்பாளர்கள் இவ்விவாத ஏற்பாடுகளைக் கைவிட்டனர்.
தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களான ஆங், கான் மற்றும் நடப்பு துணைத்தலைவர் லியாவ் தியாங் லாய் ஆகிய 3 பேருக்கிடையே இவ்விவாதம் நடத்த கட்சி ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.