புதுடெல்லி, ஜன 3- நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றது. தீர்மானத்துக்கு ஆதரவாக 36 வாக்குகளும், எதிராக 32 வாக்குகளும் கிடைத்தன.டெல்லி பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 31 இடங்களை பிடித்த பாரதிய ஜனதா கட்சி, ஆட்சியமைக்க மறுத்துவிட்டது.
இதையடுத்து, 28 இடங்களை பிடித்த ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க 8 இடங்களை பிடித்த காங்கிரஸ் ஆதரவு தந்தது. இதையேற்று ஆம் ஆட்சி கட்சி கடந்த சனியன்று ஆட்சியமைத்தது. முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்றார். மேலும், 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதையடுத்து, புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் மாதின் அகமது பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், பேரவையின் 2ம் நாள் கூட்டம் நேற்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியவுடன், அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் மனீஷ் சிசோடியா தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், இங்கு அமர்ந்திருப்பதும வெறும் சட்டமன்ற உறுப்பினர் இல்லை. டெல்லி மக்கள் சார்பில் 70 பிரதிநிதிகள் அமர்ந்துள்ளனர்.
இந்த பேரவை கூட்டத்தை நாடே பார்த்து கொண்டிருக்கிறது. அதனால் கட்சி வேறுபாடுகளை பார்க்காமல், மக்களின் அரசை ஆதரிக்க வேண்டுகிறேன் என்றார்.நம்பிக்கை தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் ஹர்ஷ் வர்தன் பேசுகையில், தேர்தலுக்கு முன்பும், முடிவுகள் வெளியான பின்பும், காங்கிரசை ஆதரிக்க மாட்டோம். அதன் ஆதரவை ஏற்க மாட்டோம் என்று முதல்வர் கெஜ்ரிவால் தனது மகனின் பெயரில் சத்தியம் செய்தார்.
இன்று அந்த சத்தியத்தை அவர் மீறிவிட்டார். பாதுகாப்பு வேண்டாம் என்று கூறி மக்களிடம் நடிக்கிறீர்கள். ஆனால், பதவியேற்பு விழாவுக்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இப்போதும் முதல்வருக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுளளது. ஆம் ஆத்மி கட்சியினர் தேசத்துக்கு விரோதமாக பேசுகின்றனர் என்றார்.
காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பேசுகையில்,மக்களின் நலனுக்காக இந்த அரசுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம். மக்களின் நலனுக்காக ஆம் ஆத்மி அரசு செயல்பட்டால் 5 ஆண்டுகள் முழுமையாக ஆதரவு தர காங்கிரஸ் தயாராக உள்ளது. 48 மணி நேரத்தில் அரசு கவிழந்துவிடும் என்று தொடர்ந்து கூறி மக்களின் அனுதாபத்தை பெற கெஜ்ரிவால் முயற்சிக்கிறார்.
ஆனால், மக்களின் நலனுக்காக நீங்கள் செயல்படும் வரை இந்த அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று உறுதியளிக்கிறேன். அரசின் குடிநீர் மற்றும் மின்சாரம் தொடர்பான சலுகைகள், கண்துடைப்பு என்று சொல்லத் தேவையில்லை. காங்கிரஸ் அரசின் ஊழல் பற்றி பேசும் கெஜ்ரிவால், பா.ஜ. ஆட்சி நடக்கும் மாநகராட்சிகளின் ஊழல்கள் பற்றியும் விசாரிக்க வேண்டும் என்றார்.
இதன் பின், முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது நாட்டின் அரசியல் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவு உங்கள் கையில் உள்ளது. அரசியலில் உண்மையும் நேர்மையும் நீடிக்க வேண்டும் என்றால் அரசுக்கு ஆதரவு தாருங்கள்.காங்கிரஸ் ஆட்சியிலும், பா.ஜ., ஆட்சி நடக்கும் மாநகராட்சிகளிலும் ஊழல் நடந்திருந்தால் அதை பற்றி விசாரிப்போம். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்.
எங்களை எல்லாரும் ஆம் ஆத்மி என்று அழைக்கின்றனர். நாங்கள் யார்? அரசியலுக்கு புதியவர்கள்.நாங்கள் மிகவும் சாதாரணமானவர்கள். நாட்டின் அரசியல் மிகவும் பாதித்துவிட்டது. அதை தூய்மைப்படுத்தவே நாங்கள் கட்சி தொடங்கினோம். கல்வி, சுகாதாரம், சாலைகள் என அனைத்துமே தரம் கெட்டுவிட்டது. கட்சி தொடங்கி, தேர்தலில் போட்டியிட்டு சட்டத்தை உருவாக்குங்கள் என்று சவால் விடுத்தனர். அதை ஏற்று கட்சியை தொடங்கினோம், தேர்தலில் போட்டியிட்டு இன்று ஆட்சி அமைத்துள்ளோம்.
தேர்தலுக்கு முன் எங்களால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்று கேலி செய்தனர். எங்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்று முன்னாள் முதல்வர் கூறினார். ஆனால், எங்களுக்கு ஆதரவு தந்து மக்கள் அவர்களை கேலி செய்துவிட்டனர். கடந்த டிசம்பர் 8ம் தேதி அதிசயம் நடந்தது. நாத்திகனாக இருந்த நான், அன்றுதான் கடவுளை முழுமையாக நம்பினேன். உண்மை தோற்காது என்பதை டெல்லி மக்கள் உணர்த்திவிட்டனர்.
ஊழல் அரசியலில் இருந்து நாடு விடுதலை பெறும் என்ற நம்பிக்கையை டெல்லி மக்கள் ஏற்படுத்தியுள்ளனர். நாட்டில் விஐபி கலாசாரத்தை ஒழிக்க வேண்டும், ஜன்லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்ற 17 வாக்குறுதிளை முதலில் நிறைவேற்றவதுதான் எனது லட்சியம். டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து பெற்று தர வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். அதற்கு எல்லாரும் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன். பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்த சிறப்பு பெண்கள் பாதுகாப்பு படை உருவாக்கப்படும். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.
அவர் பேசி முடித்த பின் நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சியின் 28 உறுப்பினர்கள், காங்கிரசின் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வாக்களித்தனர். எதிராக பா.ஜ.வின் 31 பேரும் அதன் கூட்டணி கட்சியான அகாலி தளத்தின் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் வாக்களித்தனர். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.