பாக்தாத், ஜன 7– ஈராக்கில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய ‘லேவந்த்’ என்ற தீவிரவாத அமைப்பினர் பல்லூஜா, ரமாடி ஆகிய 2 நகரை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
அவற்றை மீட்க ராணுவம் தீவிரவாதிகளுடன் கடுமையாக போரிட்டு வருகிறது. ரமாடி நகரில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் பகுதிகளில் ராணுவத்தின் போர் விமானங்கள் நேற்று குண்டு வீசி தாக்கின.
அதில் 25 தீவிரவாதிகள் பலியானதாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற தாக்குதலில் 22 ராணுவ வீரர்களும், பொது மக்கள் 12 பேரும் இறந்தனர் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
58 பொது மக்கள் காயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ரமாடி நகரம் முழுவதும் மீண்டும் கைப்பற்றப்பட்டு ராணுவம் கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பல்லூஜா நகரை கைப்பற்ற ராணுவம் தீவிரம் காட்டியுள்ளது. அங்கு வீடுகளில் பதுங்கியிருக்கும் அல் கொய்தா தீவிர வாதிகளை வெளியேற்றும்படி பொது மக்களை பிரதமர் நூரிஅல்மலிகி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், குடியிருப்பு பகுதிகளில் குண்டு வீச வேண்டாம் என்றும் ராணுவத்துக்கு பிரதமர் நூரி உத்தரவிட்டுள்ளார்.