Home நாடு “நஜிப்பை காட்டிலும் அவரது அப்பா சிறந்தவர்” – அன்வார் கருத்து

“நஜிப்பை காட்டிலும் அவரது அப்பா சிறந்தவர்” – அன்வார் கருத்து

703
0
SHARE
Ad

anwar-najibகோலாலம்பூர், மார்ச் 19 – நெருக்கடியான சூழ்நிலைகளில் நஜிப்பைக் காட்டிலும் அவரது அப்பா அப்துல் ரஸாக் ஹுசைன் மிக சிறப்பாக செயல்பட்டிருப்பதாக எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

மாயமான MH370 மாஸ் விமானம் தொடர்பில், தேடும் பணியில் மலேசிய அரசாங்கத்தின் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் குறித்து உலக அளவில் ஊடகங்கள் விமர்சித்து வரும் நிலையில், இவ்விவகாரத்தை காஜாங் இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் அன்வார் சுட்டிக் காட்டியுள்ளார்.

கடந்த 1975 ஆண்டு, கோலாலம்பூரில் அமெரிக்க காப்பீட்டு நிறுவன கட்டிடத்தில் (American Insurance Associates) ஜப்பானின் சிவப்பு இராணுவம் (Japanese Red Army) 53 பேரை பிணைக் கைதிகளாக வைத்து, தங்களது இயக்கத்தைச் சேர்ந்த 5 பேரை விடுதலை செய்யும் படி கோரிக்கை விடுத்த நெருக்கடியான சூழ்நிலையில், அப்துல் ரஸாக் எடுத்த அதிரடி நடவடிக்கைகளை உலக நாடுகள் அனைத்தும் பாராட்டின என்று அன்வார் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

ஆனால் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மாயமான விவகாரத்தில் நஜிப்பின் முரண்பாடான அறிக்கைகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதாக அன்வார் தெரிவித்தார்.

“ரஸாக் மிகவும் கண்டிப்பானவர். அவர் தனது மகனை விட சிறந்தவர். காரணம் அவர் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை” என்று நேற்று இரவு சுங்கை கண்டானில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அன்வார் கூறினார்.

நஜிப் அவரது மனைவி ரோஸ்மாவின் கட்டுப்பாட்டில் உள்ளார் என மறைமுகமாக அன்வார் குறிப்பிட்டுள்ளார்.